பேரணாம்பட்டு மலைப்பாதையில் 200 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்து தஞ்சாவூர் டிரைவர் பலி
- தஞ்சாவூரைச் சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 38).
- பள்ளத்தில் கவிழ்ந்து கிடக்கும் லாரியை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பேரணாம்பட்டு:
தஞ்சாவூரைச் சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 38). இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள லாரி டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்து வந்தார்.
நேற்று கர்நாடகா மாநிலம், கே.ஜி.எப்.ல் இருந்து கனரக லாரியில் அரிசி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு காஞ்சிபுரம் நோக்கி வந்து கொண்டு இருந்தார்.
நேற்று இரவு 11 மணி அளவில் தமிழக ஆந்திர எல்லையான பத்தலபள்ளி மலைப்பாதையில் லாரி வந்து கொண்டு இருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி கண்ணிமைக்கும் நேரத்தில் 200 அடி பள்ளத்தில் விழுந்தது.
அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் இதுகுறித்து பேர்ணம்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் ராஜன் பாபு மற்றும் போலீசார் தீயணைப்பு துறையினர் அடர்ந்த வனப்பகுதியில் கும்மிருட்டில் லாரி கவிழ்ந்து கிடந்த இடத்திற்கு சென்று பார்த்தனர்.
அப்போது லாரி டிரைவர் வேல்முருகன் ஈடுபாடுகளில் சிக்கி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். போலீசார், தீயணைப்பு துறையினர் உதவியுடன் 200 அடி பள்ளத்தில் இருந்து லாரி டிரைவரின் பிணத்தை கயிறு கட்டி மேலே இழுத்து வந்தனர்.
மேலும் பள்ளத்தில் கவிழ்ந்து கிடக்கும் லாரியை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேர்ணாம்பட்டு பத்தலபள்ளி மலைப்பாதையில் லாரிகள் அடிக்கடி கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் நிகழ்ந்து வருகிறது. இதனை தடுக்க போலீசார் மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.