தமிழ்நாடு செய்திகள்
ஆசிரியர்கள் உண்ணாவிரதம் 5-வது நாளாக நீடிப்பு
- ஊதிய உயர்வு குறித்த உறுதி மொழி அரசு தரப்பில் தெரிவிக்கும் வரை போராட்டம் தொடரும் என்று ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
- 144 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு ராஜீவ் காந்தி மற்றும் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
சென்னை:
இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 27-ந்தேதி சங்கத்தின் பொதுச்செயலாளர் ராபர்ட் தலைமையில் தொடங்கிய உண்ணாவிரதம் இன்று 5-வது நாளாக நீடிக்கிறது.
இதுவரையில் 144 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு ராஜீவ் காந்தி மற்றும் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். போராட்ட தளத்திலும் சிலருக்கு குளுக்கோஸ் ஏற்றப்படுகிறது.
இதற்கிடையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதையடுத்து ஆசிரியர்கள் உண்ணாவிரதத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். ஊதிய உயர்வு குறித்த உறுதி மொழி அரசு தரப்பில் தெரிவிக்கும் வரை போராட்டம் தொடரும் என்று ஆசிரியர்கள் தெரிவித்தனர்.