சீன பட்டாசுகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை- போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
- சுற்றுச்சூழலுக்கு உகந்த ரசாயன பொருட்களால் தயாரிக்கப்பட்ட பசுமை பட்டாசுகள் மட்டும் வெடிக்க வேண்டும்.
- சீன தயாரிப்பு வெடிகளை விற்பனை செய்யவோ, வெடிக்கவோ கூடாது.
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பா.சிபாஸ் கல்யாண் நிருபர்களிடம் கூறியதாவது:-
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பொதுமக்களும் எவ்வித அசம்பாவிதமும் இன்றி அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் தீபாவளி பண்டிகையை கொண்டாட தகுந்த முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழலுக்கு உகந்த ரசாயன பொருட்களால் தயாரிக்கப்பட்ட பசுமை பட்டாசுகள் மட்டும் வெடிக்க வேண்டும்.
மேலும் சீன தயாரிப்பு வெடிகளை விற்பனை செய்யவோ, வெடிக்கவோ கூடாது.பொதுமக்கள் பட்டாசு வெடிக்கும்போது எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் ஏதும் அருகில் இல்லாதவாறு பார்த்து பட்டாசு வெடிக்க வேண்டும். குடிசைகள் பக்கத்திலோ, ஓலைகூரைகள் உள்ள இடங்களிலோ வாண வேடிக்கை பட்டாசுகள் வெடிக்கக்கூடாது.
குழந்தைகள் தனியாக பட்டாசுகளை வெடிக்கக் கூடாது. பட்டாசு வெடிக்கும் போது குழந்தைகளுக்கு பாதுகாப்பாக பெரியவர்கள் இருக்க வேண்டும்.
திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 41 கடைகளின் உரிமைதாரர்கள் இந்த வருடம் பட்டாசு விற்பனை செய்ய உரிமம் கோரி மனு செய்ததில் 25 கடைகளுக்கு பட்டாசு விற்பனை செய்ய உரிமம் வழங்கப்பட்டுள்ளது. 16 கடைகளில் சரியான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாததால் உரிமம் மறுக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் 2 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், 9 துணைக் காவல் கண்காணிப்பாளர்கள், 25 காவல் ஆய்வாளர்கள், 150 உதவி, சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மற்றும் 400 காவலர்களும், 100 ஆயுதப் படை காவலர்களும் 140 பயிற்சி காவலர்களும் மற்றும் 200 ஊர்க்காவல் படையினரும் இன்று முதல் 25-ந்தேதி வரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
தீபாவளி பண்டிகை நாட்களில் அசம்பாவிதங்களை தடுக்கவும், கையாளவும், விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்கவும் திருவள்ளூர் மாவட்டத்தில் மற்ற துறைகளான தீயணைப்புத்துறை, சுகாதாரத்துறை மற்றும் பொதுப் பணித்துறை அலுவலர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். அவசர ஊர்திகள் தயார் நிலையில் உள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை தவிர மற்ற நேரங்களில் பட்டாசு வெடித்தால் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.