தமிழ்நாடு செய்திகள்

விருதுநகரில் கோவில் நிலத்தை காட்டி ரூ.70 லட்சம் மோசடி- 6 பேர் மீது வழக்கு

Published On 2022-11-04 11:30 IST   |   Update On 2022-11-04 11:30:00 IST
  • விருதுநகர் அருகே உள்ள சூளக்கரை வீரப்பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ரங்கநாயகி.
  • போலீசார் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விருதுநகர்:

விருதுநகர் அருகே உள்ள சூளக்கரை வீரப்பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ரங்கநாயகி. இவரது சகோதரர் சூரியநாராயணன். சிங்கப்பூரில் பணியாற்றி வருகிறார். அவர் அனுப்பும் சம்பள பணத்தை சேர்த்து வைத்து அந்த பகுதியில் நிலம் வாங்க ரங்கநாயகி முடிவு செய்தார்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு 2020-ம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டம் சிவகிரிபட்டியை சேர்ந்த பத்மநாதபன் என்பவர் ரங்கநாகிக்கு அறிமுகமானார். அப்போது தான் ஓய்வு பெற்ற நீதிபதி என்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாக கூறியுள்ளார்.

மதுரை வண்டியூரில் 12 ஏக்கர் 70 செண்டு நிலம் ரூ.34 கோடியே 92 லட்சத்து 50 ஆயிரத்துக்கு விற்பனைக்கு உள்ளது என்று கூறியுள்ளார். இதனை நம்பி ரங்கநாயகி ரூ.70லட்சம் வரை பத்மநாபனிடம் கொடுத்துள்ளார். பணத்தை பெற்று கொண்ட அவர் நிலத்தை பதிவு செய்து தரவில்லை. இதுகுறித்து விசாரித்த போது பத்மநாபன் குறிப்பிட்ட நிலம் மதுரை கள்ளழகர் கோவிலுக்கு சொந்தமானது என தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ரங்கநாயகி பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார். அவர் பணம் தர மறுத்ததோடு கொலை மிரட்டலும் விடுத்தாக கூறப்படுகிறது.

இந்த மோசடிக்கு பத்மநாபனுடன் அவரது மகன் சதீஷ் மற்றும் சுமதி, அங்குராஜ், சந்திரன், குழந்தை செல்வம் ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர்.

இதுகுறித்து ரங்கநாயகி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News