தமிழ்நாடு

செங்குன்றத்தில் உராங்குட்டான் குரங்கு கடத்தலுக்கு உதவிய சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 4 போலீசார் சஸ்பெண்டு

Published On 2023-02-24 06:01 GMT   |   Update On 2023-02-24 06:01 GMT
  • குரங்கு கடத்தல் கும்பலுக்கு சப்-இன்ஸ்பெக்டர் அசோக், போலீஸ்காரர்கள் வல்லரசு, மகேஷ், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உதவியதாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
  • ஒரே போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 4 போலீசார் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செங்குன்றம்:

செங்குன்றம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் அசோக். இவர் கடந்த வாரம் போலீஸ்காரர்க்ள வல்லரசு, மகேஷ், கிருஷ்ண மூர்த்தி ஆகியோருடன் பாடிய நல்லூர் சோதனைச்சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டார்.

அப்போது ஆந்திராவில் இருந்து வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் இருந்த கும்பல் அரிய வகையான உராங்குட்டான் குரங்கை வெளிநாட்டுக்கு கடத்த சென்னை விமான நிலையம் நோக்கி செல்வது தெரிந்தது.

இதைத்தொடர்ந்து கடத்தல் கும்பலுடன் நடத்திய பேச்சுவார்தையில் சப்-இன்ஸ்பெக்டர் அசோக் உள்பட போலீசார் 4 பேரும் கடத்தல் கும்பலை அரிய வகை குரங்குடன் அங்கிருந்து செல்ல அனுமதித்தனர். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

இந்த நிலையில் குரங்கு கடத்தல் கும்பலுக்கு சப்-இன்ஸ்பெக்டர் அசோக், போலீஸ்காரர்கள் வல்லரசு, மகேஷ், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உதவியதாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து தனிப்படை போலீசார் இதுபற்றி தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, வாகன சோதனையின் போது உராங்குட்டான் குரங்கு கடத்தல் கும்பலிடம் பணத்தை பெற்று கொண்டு சப்-இன்ஸ்பெக்டர் அசோக் உள்பட 4 போலீசாரும் அவர்களை அங்கிருந்து தப்பி செல்ல அனுமதித்து இருப்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து குரங்கு கடத்தல் கும்பலுக்கு உதவிய சப்-இன்ஸ்பெக்டர் அசோக், போலீஸ்காரர்கள் வல்லரசு,மகேஷ், கிருஷ்ண மூர்த்தி ஆகிய 4 பேரையும் ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் அதிரடியாக சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

ஒரே போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 4 போலீசார் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News