சைதாப்பேட்டையில் மதுபோதையில் கூவம் ஆற்றில் இறங்கிய டிரைவர் தண்ணீரில் மூழ்கி பலி
- தண்ணீரில் மூழ்கி எடிசன் உயிரிழந்திருப்பது தெரிய வந்தது.
- கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை:
சென்னை சைதாப்பேட்டை சின்னமலை ஆரோக்கிய மாதா நகரை சேர்ந்தவர் எடிசன். கார் டிரைவராக பணிபுரிந்து வந்தார். 48 வயதான எடிசனுக்கு திருமணமாகி மனைவியும் 2 மகன்களும் உள்ளனர்.
நேற்று மாலை 3 மணி அளவில் எடிசன் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது சைதாப்பேட்டை பகுதியில் உள்ள கூவம் ஆற்றில் எடிசன் இறங்கியுள்ளார். கரையில் இருந்து சிறிது தூரம் உள்ளே சென்ற நிலையில் எடிசன் திடீரென சேற்றில் சிக்கினார். கரையில் இருந்த சிலர் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்களின் முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை.
எடிசன் தண்ணீரில் மூழ்கினார். இதுபற்றி கோட்டூர்புரம் போலீசுக்கும் தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவர்கள் உடனடியாக விரைந்து வந்து ரப்பர் படகுகளில் சென்று எடிசனை தேடி பார்த்தனர். 3 படகுகளில் 15-க்கும் மேற்பட்ட வீரர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
இரவு நேரம் ஆன நிலையில் கூவம் ஆற்றில் இருந்து விஷ வாயு போன்ற துர்நாற்றம் வீசியது. இதனால் தேடும் பணியை தீயணைப்பு படையினர் கைவிட்டனர்.
இன்று காலையில் மீண்டும் தேடும் பணி நடைபெற்றது. இதில் தண்ணீரில் மூழ்கி எடிசன் உயிரிழந்திருப்பது தெரிய வந்தது.
அவரது உடலை மீட்டு தீயணைப்பு வீரர்கள் கரைக்கு கொண்டு வந்தனர். அப்போது எடிசனின் உறவினர்கள் உடலை பார்த்து கதறி அழுதனர். பிரேத பரிசோதனைக்காக எடிசனின் உடல் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. இது தொடர்பாக கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.