தமிழ்நாடு

தமிழகம் முழுவதும் 2-வது நாளாக பாதுகாப்பு ஒத்திகை: கடலோர பகுதிகளில் தீவிர கண்காணிப்பு

Published On 2022-11-16 06:07 GMT   |   Update On 2022-11-16 06:07 GMT
  • கடலோர பகுதிகள் அனைத்தும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்தது.
  • கண்காணிப்பு பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டிருந்தன.

சென்னை:

மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு கடல் வழியாக புகுந்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவத்தை தொடர்ந்து பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் ஆண்டுக்கு 2 முறை பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது.

'சிவிஜில் 2022' என்ற பெயரில் நேற்று தொடங்கிய இந்த பாதுகாப்பு ஒத்திகை தமிழகம் முழுவதும் இன்று 2-வது நாளாக நடைபெற்று வருகிறது. சென்னை முதல் கன்னியாகுமரி வரையில் உள்ள 13 கடலோர மாவட்டங்களிலும் நடைபெற்று வரும் இந்த பாதுகாப்பு ஒத்திகையில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடலோர பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

இவர்களுடன் உள்ளூர் போலீசாரும் இந்த ஒத்திகையில் ஈடுபட்டு வருகிறார்கள். சென்னையில் மெரினா கடற்கரை மற்றும் பட்டினப்பாக்கம் கடலோர பகுதிகளில் 2-வது நாளாக பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது.

கடலோர மாவட்டங்களில் பயங்கரவாதிகள் போல ஊடுருவியவர்களை பல இடங்களில் போலீசார் மடக்கி பிடித்தனர். சில பகுதிகளில் கோட்டையும் விட்டுள்ளனர். இறுதி நாளான இன்றும் கடலோர பாதுகாப்பு படையினருடன் சுங்கத்துறையினரும் இணைந்து ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர்.

இதையடுத்து கடலோர பகுதிகள் அனைத்தும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்தது. கண்காணிப்பு பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டிருந்தன.

கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீசார் 2 அதிநவீன ரோந்து படகுகள் மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

சின்னமுட்டம், பஞ்சலிங்கபுரம், மகாதானபுரம், தேங்காய்பட்டணம், கூடங்குளம் உள்பட 10 இடங்களில் உள்ள கடலோர பாதுகாப்பு குழும போலீசுக்கு சொந்தமான சோதனை சாவடிகளில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அப்போது 4 பேர் கடற்கரை வழியாக பயங்கரவாதிகள் போல் நடித்து ஒரு படகில் தப்பிசெல்ல முயன்றனர். அவர்களை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் மடக்கி பிடித்தனர்.

Tags:    

Similar News