குடியாத்தம் மத்திய கூட்டுறவு வங்கி கிளையில் ரூ.97 லட்சம் மோசடி செய்த பெண் மேலாளர் பணி நீக்கம்
- மகளிர் சுய உதவி குழுக்களின் பெயரில் போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.97 லட்சம் கடன் மோசடி செய்திருப்பது தெரியவந்தது.
- விசாரணையில் கிளை மேலாளர் உமா மகேஸ்வரி இந்த மோசடியில் நேரடியாக ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
வேலூர்:
வேலூர் மத்திய கூட்டுறவு வங்கியின் கிளை குடியாத்தத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் பயிர் கடன், மகளிர் சுய உதவி குழு கடன், புதிய தொழில் தொடங்குவதற்கான கடன்கள் வழங்கப்படுகிறது.
கடந்த 2018-19 ஆம் ஆண்டுகளில் இந்த வங்கியில் மகளிர் சுய உதவி குழுவினருக்கு வழங்கிய கடன்களில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. அதன் பெயரில் கூட்டுறவு சங்க தணிக்கை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
இதில் மகளிர் சுய உதவி குழுக்களின் பெயரில் போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.97 லட்சம் கடன் மோசடி செய்திருப்பது தெரியவந்தது.
இது தொடர்பான விசாரணையில் கிளை மேலாளர் உமா மகேஸ்வரி இந்த மோசடியில் நேரடியாக ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த ஜூன் மாதம் வேலூர் கூட்டுறவு துணைப்பதிவாளர் அருட்பெருஞ்ஜோதி அளித்த புகாரின் பேரில் வேலூர் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து உமா மகேஸ்வரியை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
மேலும் அவர் சஸ்பெண்டு செய்யப்பட்டார். இதற்கிடையில் உமா மகேஸ்வரி கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்தார். அவரை பணிநீக்கம் செய்து வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பொது மேலாளர் தற்போது உத்தரவிட்டுள்ளார்.
மேலும் வங்கி தொடர்பாக பொதுமக்கள் உமா மகேஸ்வரியுடன் தொடர்பு கொள்ளக்கூடாது என தெரிவித்துள்ளதாக கூட்டுறவு வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.