தமிழ்நாடு செய்திகள்

தினமும் ரூ.500 வழங்குவதால் தேர்தல் பணிமனையில் குவியும் பொதுமக்கள்

Published On 2023-02-06 15:12 IST   |   Update On 2023-02-06 15:12:00 IST
  • ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வினர் கூட்டணி கட்சியினருடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
  • மற்ற அரசியல் கட்சியினர் மக்கள் யாரும் வீடுகளில் இல்லாததால் பிரசாரம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஈரோடு:

ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வினர் கூட்டணி கட்சியினருடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கிழக்கு தொகுதியில் உள்ள 33 வார்டுகளிலும் கூட்டணி கட்சிகளின் சார்பில் தேர்தல் பணிமனை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பணிமனையில் தேர்தல் பொறுப்பாளர்கள், பணிக்குழுவினர், உள்ளுர் மற்றும் வெளியூர் நிர்வாகிகள் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை தேர்தல் பணியாற்றி வருகின்றனர்.

இவர்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட பகுதியில் தினமும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் கட்சியின் கொடி, சின்னத்துடன் சென்று வீடு, வீடாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கிழக்கு தொகுதியில் எங்கு பார்த்தாலும் அரசியல் கட்சியினராகவே உள்ளனர்.

இதற்கிைடயே ஒரு அரசியல் கட்சி சார்பில் வீடுகளின் முன்பு தங்களது கட்சி சின்னம் கோலம் போடப்பட்டு இருந்தால் 500 வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இதே போல் தினமும் மாலையில் 6 மணி முதல் இரவு 8 மணி வரை தேர்தல் பணிமனையில் பெண்கள் அமர்ந்து இருந்தால் அவர்களுக்கு 500 ரூபாயும், இரவு 8 மணி முதல் 10 மணிவரை அமர்ந்து இருக்கும் அண்களுக்கு ரூ.500 மற்றும் மதுவும் வழங்கப்படுவதாக குற்றம் சாட்டப்படுகிறது. எந்த வேலையும் செய்யாமல் தேர்தல் பணிமனையிலேயே அமர்ந்து இருந்தாலே பணம் வழங்கப்படுவதால் மாலை நேரங்களில் பொதுமக்கள் தேர்தல் பணிமனைகளில் குவிந்து வருகிறார்கள். அவர்களுக்கு டீ மற்றும் சுடச்சுட வடை, போண்டா ஆகியவையும் வழங்கப்படுகிறது.

மாலை நேரங்களில் எந்த வேலையும் செய்யாமல் தேர்தல் பணிமனையில் அமர்ந்தாலே பணம் என்பதால் மாலை நேரத்தில் ஆண்கள், பெண்கள் அனைவரும் தேர்தல் பணிமனையிலேயே இருக்கிறார்கள். இதனால் மற்ற அரசியல் கட்சியினர் மக்கள் யாரும் வீடுகளில் இல்லாததால் பிரசாரம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து அரசியல் கட்சியினர் சிலர் கூறும்போது, இந்த தொகுதியில் பெரும்பாலானோர் தொழிலாளர்களாக உள்ளனர். இதனால் காலையில் வேலைக்கு சென்று விடுகிறார்கள். எனவே மாலை நேரத்தில் பிரசாரம் செய்யலாம் என்று இருந்தால் அவர்கள் குறிப்பிட்ட அரசியல் கட்சியின் தேர்தல்பணிமனையில் அமர்ந்து உள்ளனர். அங்கு சென்று அவர்களிடம் வாக்கு சேகரிக்க முடியாது. எனவே மற்ற வேட்பாளர்கள் பிரசாரமே செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News