தமிழ்நாடு

சாலை விபத்தை தடுக்க லாரி, மினி வேன்களில் இனி அதிக பாரம் ஏற்றினால் அபராதம்- போக்குவரத்து துறை நடவடிக்கை தீவிரம்

Published On 2023-08-07 08:53 GMT   |   Update On 2023-08-07 08:53 GMT
  • குற்றத்திற்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று போக்குவரத்து துறை கமிஷனர் கூறினார்.
  • சுமை ஏற்றுவது மோசமான சாலை போக்கு வரத்துக்கு வழிவகுக்கிறது.

சென்னை:

தேசிய நெடுஞ்சாலைகளில் அதிக பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்களால் விபத்துக்கள் ஏற்படுகின்றன. இதனால் உயிர் இழப்பும் ஏற்படுவதால் மத்திய மோட்டார் வாகன விதிகளை கடுமையாக அமல் படுத்துமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் லாரிகள், மினி வேன்களில் அதிகளவில் சரக்குகளை ஏற்றிச் செல்வதை தடுக்கும் வகையில் போக்கு வரத்துத் துறை, வாகன ஆய்வாளர்கள் மற்றும் வட்டார போக்கு வரத்து அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதிக பாரம் ஏற்றிய குற்றத்திற்காக சரக்குதாரர், வாகன உரிமையாளர் மற்றும் வாகனங்கள் மீது மத்திய மோட்டார் வாகன சட்ட விதிகளின் கீழ் அதிக பட்ச அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க உத்தர விடப்பட்டுள்ளது.

மத்திய சாலை போக்கு வரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் கடிதத்தை சுட்டிக்காட்டி போக்கு வரத்து கமிஷனர் சண்முக சுந்தரம் சமீபத்தில் அனைத்து வட்டார போக்கு வரத்து அதிகாரிகளுக்கும் பிரிவு 113, பிரிவு 114, பிரிவு 194 விதிகளின்படி "ஓவர் லோடு" வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தி உள்ளார்.

அதிக சுமை ஏற்றிய வாகனங்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட வேண்டும். அதேபோல அந்த வாகனத்தின் டிரைவர், அதிக சுமையை மதிப்பிடுவதற்கு எடை அளவு செய்ய கொண்டு செல்ல வேண்டும். அதிக சுமை இருப்பது கண்டறியப்பட்டால் அதிக எடையை வாகனத்தில் இருந்து இறக்க வேண்டும். இதை செய்ய தவறினால் ரூ.40 ஆயிரம் அபராதம் விதிக்கப்படலாம்.

மேலும் வாகனங்களில் அதிக சுமை ஏற்றியதற்காக சரக்கு அனுப்புபவர், வாகன உரிமையாளர் மற்றும் வாகனங்கள் மீது வழக்குகளை பதிவு செய்ய ஆய்வாளர் அல்லது காவல்துறைக்கு அதிகாரம் உள்ளது. இந்த குற்றத்திற்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று போக்குவரத்து துறை கமிஷனர் கூறினார்.

இது குறித்து தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் எஸ்.யுவராஜ் கூறும்போது, "அரசின் இந்த முடிவை வரவேற்கிறோம். குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். அதிக சுமை ஏற்றுவது மோசமான சாலை போக்கு வரத்துக்கு வழிவகுக்கிறது.

போலீசாரோ, ஆர்.டி.ஓவோ அதிக பாரம் ஏற்றிய வாகனங்களை சோதனைக்காக நிறுத்தும் போது அதிகமாக ஏற்றிய சுமையை இறக்கி விட வேண்டும். மாறாக அதிகாரிகள் அபராதம் விதித்து வாகனத்தை பயணிக்க அனுமதிக்கின்ற நடைமுறைகளை விரைவில் முடிவுக்கு கொண்டு வரவேண்டும்" என்றார்.

Tags:    

Similar News