தமிழ்நாடு செய்திகள்

ரூ.2 ஆயிரம் கோடி போதைப்பொருள் கடத்தலில் யார்-யாருக்கு தொடர்பு? நெருங்கிய நண்பர்கள் சிக்குகிறார்கள்

Published On 2024-02-27 14:44 IST   |   Update On 2024-02-27 14:44:00 IST
  • ஜாபர் சாதிக் 3 செல்போன்களை பயன்படுத்தி வந்துள்ளார். தற்போது அனைத்து செல்போன்களும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு உள்ளது.
  • ஜாபர் சாதிக்குடன் நெருக்கமான தொடர்பில் இருந்த சினிமாதுறையினர் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பற்றிய விவரத்தினையும் ரகசியமாக போலீசார் சேகரித்து விசாரித்து வருகின்றனர்.

சென்னை:

போதைப்பொருள் தயாரிக்க பயன்படுத்தும் முக்கிய வேதிப்பொருட்களை தேங்காய் பவுடர் மற்றும் சத்துமாவு பாக்கெட்டுகளில் மறைத்து வைத்து நியூசிலாந்து, ஆஸ்திரேலிய உள்ளிட்ட நாடுகளுக்கு கடத்தப்படுவதாக அந்த நாடுகளை சேர்ந்த சுங்கத்துறை அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய போதைப்பொருட்கள் தடுப்புப் பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் கண்காணித்த போது போதைப்பொருள் கடத்தல் கும்பல் மேற்கு டெல்லியில் உள்ள கைலாஸ் பார்க் பகுதியில் உள்ள குடோனில் செயல்படுவது தெரிந்தது. இதைத் தொடர்ந்து கடந்த 15-ந்தேதி போலீசார் அந்த குடோனில் சோதனை செய்த போது அங்கிருந்த சென்னையை சேர்ந்த முகேஷ், முஜிபூர் ரகுமான், விழுப்புரத்தை சேர்ந்த அசோக் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

இந்த போதைப்பொருள் கடத்தலுக்கு சென்னையை சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர்சாதிக் என்பவர் மூளையாக செயல்பட்டது தெரிய வந்தது. கடந்த 3 ஆண்டுகளில் அவர்கள் சுமார் ரூ.2 ஆயிரம் கோடி போதைப்பொருட்களை கடத்தி இருப்பதும் தெரியவந்தது.

தி.மு.க.வில் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளராக இருந்த ஜாபர் சாதிக் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார்.

இதற்கிடையே போலீசார் தேடுவதை அறிந்ததும் ஜாபர்சாதிக் தலைமறைவாகிவிட்டார். அவரை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் டெல்லி போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டு உள்ள சம்மனை சென்னை மயிலாப்பூரில் உள்ள ஜாபர்சாதிக் வீட்டில் ஒட்டி உள்ளனர். இதேபோல் புரசைவாக்கம் டவுட்டன் பகுதியில் உள்ள அவரது அலுவலகத்திலும் சம்மன் ஒட்டப்பட்டு உள்ளது.

ரூ.2 ஆயிரம் கோடி போதைப்பொருட்கள் கடத்தல் பின்னணியில் ஜாபர்சாதிக்குடன் தொடர்பில் உள்ளவர்கள் யார்? யார்? என்ற விபரங்களை தனிப்படை போலீசார் சேகரித்து வருகின்றனர்.

ஜாபர்சாதிக் 3 செல்போன்களை பயன்படுத்தி வந்துள்ளார். தற்போது அனைத்து செல்போன்களும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் ஜாபர்சாதிக் இருக்கும் இடம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் சினிமா தயாரிப்பாளராக இருந்த ஜாபர்சாதிக்கிற்கு சினிமா துறையிலும், அரசியல் பின்னணியிலும் நட்பு வட்டாரங்கள் பெரிய அளவில் உள்ளன. இதில் போதைப்பொருள் கடத்தல் பின்னணயில் அவரது நண்பர்கள் சிலருக்கும் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்து உள்ளது.

இதனால் அவர்களும் விரைவில் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜாபர்சாதிக்குடன் நெருக்கமான தொடர்பில் இருந்த சினிமாதுறையினர் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பற்றிய விவரத்தினையும் ரகசியமாக போலீசார் சேகரித்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News