தமிழ்நாடு செய்திகள்
வனவிலங்கு வேட்டையில் கைதானவர்கள்.

வனவிலங்குகள் வேட்டையில் மேலும் 20 பேருக்கு வலைவீச்சு- அரசியல் கட்சி பிரமுகர்களும் சிக்குகிறார்கள்

Published On 2022-11-07 08:52 IST   |   Update On 2022-11-07 08:52:00 IST
  • கீழவடகரையை சேர்ந்த ஒரு கும்பல் மின்சார வேலி அமைத்து கடமான், பன்றி, முயல், உடும்பு போன்ற வனவிலங்குகளை தொடர்ச்சியாக வேட்டையாடி கறியை பங்கு போட்ட திடுக்கிடும் தகவல் வெளியானது.
  • முக்கிய பிரமுகர்களுக்கும் வனவிலங்குகளின் கறி சப்ளை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

களக்காடு:

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள கீழவடகரை கிராமத்தில் கடந்த 14-ந்தேதி ஒரு தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி கரடி உயிரிழந்தது.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த வனத்துறையினர் நாகன்குளத்தை சேர்ந்த கணேசனை கைது செய்து விசாரணை நடத்தினர்.

இதில் கீழவடகரையை சேர்ந்த ஒரு கும்பல் மின்சார வேலி அமைத்து கடமான், பன்றி, முயல், உடும்பு போன்ற வனவிலங்குகளை தொடர்ச்சியாக வேட்டையாடி கறியை பங்கு போட்ட திடுக்கிடும் தகவல் வெளியானது. அவர்கள் முக்கிய பிரமுகர்களுக்கும் வனவிலங்குகளின் கறி சப்ளை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர்ந்து விசாரணையை தீவிரப்படுத்திய களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் ரமேஷ்வரன், களக்காடு வனசரகர் பிரபாகரன் மற்றும் வனத்துறையினர் கடந்த 23-ந்தேதி கீழப்பத்தை வடக்குத் தெருவை சேர்ந்த ரமேஷ் (வயது33) என்பவரை கைது செய்தனர்.

இதற்கிடையே இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த கீழவடகரை தெற்கு தெருவை சேர்ந்த ஜெயராஜ் (55), கீழவடகரை இந்திரா காலனியை சேர்ந்த கண்ணன் (44) ஆகிய இருவரையும் வனத்துறையினர் நேற்று கைது செய்தனர்.

இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் வேட்டையாடப்பட்ட வனவிலங்குகளின் கறியை கூறு போட்டு எடுத்து சென்ற நபர்கள் குறித்து அதிர்ச்சி தகவலும் தெரியவந்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

கறியை பங்கு போட்ட முக்கிய அரசியல் கட்சி பிரமுகர்கள் உள்பட மேலும் 20-க்கும் மேற்பட்டவர்களை வனத்துறை தனிப்படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News