தமிழ்நாடு செய்திகள்

பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பற்றி கவர்னரிடம் போலீஸ் கமிஷனர் விளக்கம்

Published On 2023-10-26 12:12 IST   |   Update On 2023-10-26 12:12:00 IST
  • பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் தலைமையில் செய்யப்பட்டு உள்ளது.
  • ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று இரவு கவர்னர் மாளிகையில் தங்குவதால், அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசித்தனர்.

சென்னை:

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று தமிழகத்துக்கு வருகை தரும் நிலையில் அவர் தங்க உள்ள தமிழக கவர்னர் மாளிகை நுழைவு வாயில் முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையடுத்து குடியரசுத் தலைவர் வருகைக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

சென்னை விமான நிலையம், கிண்டி கவர்னர் மாளிகை, பட்டமளிப்பு விழா நடைபெறும் பல்கலைக்கழக வளாகம் ஆகிய இடங்களில் முன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. குடியரசுத் தலைவர் செல்லும் வழிநெடுகிலும் 10 அடிக்கு ஒரு காவலர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளார்.

பாதுகாப்புப் பணியில் மொத்தம் 5 ஆயிரம் போலீசார் ஈடுபடுகின்றனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் தலைமையில் செய்யப்பட்டு உள்ளது.

பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சென்னை இணை போலீஸ் கமிஷனர் எம்.ஆர்.சிபி சக்கரவர்த்தி, துணை கமிஷனர் ஆர்.பொன் கார்த்திக் குமார் ஆகியோர் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து விளக்கி கூறினர்.

இந்த நிலையில் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர், கவர்னர் மாளிகைக்கு இன்று காலை நேரில் சென்றார். அப்போது பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் பற்றி விளக்கினார்.

இதேபோல மத்திய உளவுத்துறை (ஐ.பி.) அதிகாரிகள் கவர்னர் மாளிகைக்கு வந்து விசாரணை செய்தனர். மேலும் அவர்கள், ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று இரவு கவர்னர் மாளிகையில் தங்குவதால், அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசித்தனர்.

Tags:    

Similar News