முகப்பேரில் தி.மு.க. பிரமுகர் இல்ல திருமணம்- மணமகள் அழைப்பு ஊர்வலத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு
- திருமணத்திற்கு முன்பு தாய்மாமனான தமிழ் தனது வீட்டில் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
- பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக முகம்மது இப்ராகிம் மற்றும் தினேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
அம்பத்தூர்:
சென்னை முகப்பேர் கோல்டன் பிளாட்ஸ் குடியிருப்பில் வசித்து வருபவர் தமிழ். தி.மு.க சென்னை கிழக்கு மாவட்ட துணை செயலாளரான இவரது சகோதரி மகள் சரண்யா. இவருக்கு வருகிற 14-ந் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இவர்கள் குடும்பத்தினர் சவுண்ட் சர்வீஸ் வைத்து நடத்தி வருகின்றனர்.
இந்த திருமணத்திற்கு முன்பு தாய்மாமனான தமிழ் தனது வீட்டில் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
அந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு கௌசல்யா சவுண்ட் சர்வீஸ் மற்றும் இபு என்பவர் நடத்தி வரும் இபு சவுண்ட் சர்வீஸ் பார்ட்டிகள் இருவரும் கெளசல்யாவின் வீட்டிலிருந்து மேளம் அடித்துக் கொண்டு வந்தனர். அப்போது முகப்பேர் ரோடு சந்திப்பு பகுதியில் வைத்து கெளசல்யா சவுண்ட் பார்ட்டிக்கும் இபு சவுண்ட் பார்ட்டிக்கும் மேளம் அடிப்பதில் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் கௌசல்யா சவுண்ட் பார்ட்டியைச் சேர்ந்த இலி என்பவர் என்னங்கடா மேளம் அடிக்கிறீங்க என்று கூறி இபுவை கையால் அடித்துள்ளார். அதையடுத்து இபு மற்றும் அவரது நண்பர்கள் மது பாட்டிலில் பெட்ரோல் ஊற்றி துணியை சொருகி பற்றவைத்து திருமண வரவேற்பு நிகழ்ச்சி கூட்டத்தில் வீசினர்.இதில் பயங்கர சத்தத்துடன் பெட்ரோல் குண்டு வெடித்து சிதறியது.
ஆனால் நல்ல வேளையாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. உடனே அங்கிருந்த பொதுமக்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு கொடுத்த தகவலின் பேரில் கொரட்டூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக முகம்மது இப்ராகிம் மற்றும் தினேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் காரணமாக முகப்பேரில் பரபரப்பு நிலவியது.