தமிழ்நாடு

இடையூறு ஏற்படுத்தும் விளம்பர பலகைகள் வைக்க அனுமதிப்பதா?- மக்கள் அதிருப்தி

Published On 2023-05-02 10:36 GMT   |   Update On 2023-05-02 10:36 GMT
  • விளம்பர பலகைகளை வைப்பதற்கு பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
  • சென்னை மாநகராட்சி வருவாய் ஈட்டும் வகையில் விளம்பர பலகைகளை வைப்பதற்கு விரைவில் அனுமதி அளிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விளம்பர பலகைகள் சரிந்து விழுந்து பல விபத்துகள் இதற்கு முன்பு நடை பெற்றுள்ளன. இதையடுத்து விளம்பர பலகைகளை வைப்பதற்கு பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னை மாநகராட்சி வருவாய் ஈட்டும் வகையில் விளம்பர பலகைகளை வைப்பதற்கு விரைவில் அனுமதி அளிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 2022 ஐ இன்னும் சில தினங்களில் செயல்படுத்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த சட்டம் நடை முறைக்கு வந்து பொது இடங்களில் விளம்பர பலகைகள் வைப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டால் அது சிங்கார சென்னையின் அழகை கெடுக்கும் என்றும் சிங்கார சென்னையின் சிறப்பையே சீரழித்துவிடும் என்றும் பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் இந்த விளம்பர பலகைகள் அமைக்க அனுமதி அளிக்கும் செயல்பாடு மாநகராட்சியின் வருவாயை அதிகரிக்கும் எண்ணத்தில் அமல்படுத்தப்பட இருப்பதாகவும், பாதுகாப்பான வகையிலேயே அது செயல்படுத்தப்பட இருப்பதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த அனுமதிக்கு பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளதாகவே குடியிருப்புவாசிகள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் கூறும்போது விளம்பர பலகைகளை வைப்பதன் மூலம் மக்கள் மத்தியில் அது விழுந்துவிடுமோ என்கிற அச்சம் ஏற்படுவது அதிகரித்துவிடும் என்றனர். தெருவுக்கு தெரு பெயர் பலகைகளை வைத்து விடுவார்கள் என்றும் அவர்கள் ஆதங்கப்பட்டனர்.

இது தொடர்பாக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, விளம்பர பலகைகளை வைப்பதற்கு அனுமதி அளிப்பது என்பது தவறான முடிவாகும். இது வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பி விபத்துகள் ஏற்பட வழிவகுக்கும் என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News