தமிழ்நாடு

பெற்ற மகளை ஆந்திராவை சேர்ந்தவருக்கு விற்க முயன்ற பெற்றோர்- சிறுமியை மீட்ட போலீசார்

Published On 2023-03-30 08:51 GMT   |   Update On 2023-03-30 08:51 GMT
  • சிறுமியை விற்பனை செய்ய முயன்ற பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
  • சிறுமியை விலைக்கு வாங்க முயன்ற ஆந்திர நபர் யார்? அவரது பின்னணி என்ன? என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சென்னை:

தாம்பரத்தை அடுத்த படப்பை அருகே உள்ளது கரசங்கல் கிராமம். இங்கு பழங்குடியின பெண் சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். 17 வயது சிறுமி 7-வது வகுப்புடன் படிப்பை நிறுத்தி இருக்கிறார். இதன் பிறகு பெற்றோர் பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டிலேயே இருக்குமாறு கூறியுள்ளனர். ஆனால் சிறுமியோ நன்றாக படிப்பதற்கு ஆசைப்பட்டுள்ளார். இது பற்றி தனது பெற்றோரிடம் பலமுறை தெரிவித்தும் அவர்கள் அதனை கண்டுகொள்ளவில்லை.

இந்த நிலையில் பெற்ற மகள் என்றும் பாராமல் சிறுமியை ஆந்திராவை சேர்ந்த ஒருவருக்கு ரூ.1½ லட்சத்துக்கு பெற்றோர் விற்பனை செய்ய முயற்சி செய்துள்ளனர். திருமணம் என்ற பெயரில் ஆந்திராவை சேர்ந்த பணக்காரர் ஒருவருக்கு மகளை விலை பேசியதுடன் அதற்கான நாளையும் அவர்கள் குறித்தனர். இதற்காக சிறுமியை வீட்டில் தனி அறையில் அடைத்து வைத்திருந்தனர். இதனால் பதற்றமடைந்த சிறுமி, பெற்றோரின் பிடியில் இருந்து எப்படியாவது தப்பிவிட வேண்டும் என்று திட்டம் போட்டார்.

இதையடுத்து வீட்டில் இருந்த செல்போன் மூலமாக யாருக்கும் தெரியாமல் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். தாம்பரம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இருந்து மணிமங்கலம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உஷாரான மணிமங்கலம் போலீசார் உடனடியாக கரசங்கல் கிராமத்தில் உள்ள சிறுமியின் வீட்டுக்கு விரைந்து சென்றனர். போலீசாருடன் குழந்தைகள் நல அலுவலர்களும் சென்று விசாரித்தனர். போலீசார் மற்றும் அதிகாரிகளை பார்த்ததும் சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மிரண்டு போனார்கள். அவர்கள் எதுவும் தெரியாதது போல முதலில் நாடகமாடினர். இதை தொடர்ந்து போலீசார் பெற்றோரின் பிடியில் இருந்த சிறுமியை மீட்டு விசாரணை நடத்தினர்.

அப்போதுதான் சிறுமியை ரூ.1½ லட்சத்துக்கு விற்பனை செய்ய பெற்றோர் முயற்சி செய்ததும், ஆந்திர மாநிலத்தை சேர்ந்த வசதிபடைத்த வாலிபர் ஒருவர் சிறுமியை வாங்கிச் செல்வதற்கு திட்டமிட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சிறுமியின் மனதில் என்ன உள்ளது? என்பதை அறிவதற்காக விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்போது சிறுமி பெற்றோர் மீது சரமாரியாக குற்றச்சாட்டுகளை வைத்தார். என்னை படிக்க விடாமல் பெற்றோர் தடுக்கிறார்கள். யார் என்றே தெரியாத ஆந்திராவை சேர்ந்த நபருடன்தான் இனி இருக்க வேண்டும் என்று தொடர்ந்து கூறி வருகிறார்கள் என்றும் தெரிவித்தார்.

தற்போதைய நிலையில் பெற்றோருடன் இருக்க விருப்பம் இல்லை எனவும் சிறுமி பரபரப்பான வாக்குமூலத்தை அளித்தார். இதனைப் பதிவு செய்து கொண்ட போலீசார் சிறுமியை காஞ்சிபுரத்தில் உள்ள காப்பகத்தில் சேர்த்தனர். அங்கிருந்தபடியே சிறுமி படிக்க விரும்பினால் அதற்கான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுமியை விற்பனை செய்ய முயன்ற பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சிறுமியை விலைக்கு வாங்க முயன்ற ஆந்திர நபர் யார்? அவரது பின்னணி என்ன? என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News