தமிழ்நாடு செய்திகள்

விலைவாசி உயர்வுக்கு மத்திய அரசின் தாமதமான முடிவுகளே காரணம்- ப.சிதம்பரம் பேட்டி

Published On 2022-06-11 09:52 IST   |   Update On 2022-06-11 09:52:00 IST
  • அரசின் தாமதமான முடிவுகள் தான் தற்போது விலைவாசி உயர்வுக்கான காரணமாகும்.
  • மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் சேர்ந்து முடிவு எடுத்தால்தான் பணவீக்கத்தை கட்டுப்படுத்த முடியும்.

காரைக்குடி:

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக அரசியலில் கூடுதலாக கவனம் செலுத்தும் வாய்ப்பாக மாநிலங்களவை உறுப்பினர் பதவி கிடைத்திருக்கிறது.

குடியரசுத்தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்பது காங்கிரஸ் கட்சியின் விருப்பம்.

இலங்கை ஒரு காலத்தில் தனிநபர் வருமானத்தில் உயர்ந்த நாடாகவும், 98 சதவீதம் எழுத்தறிவுமிக்க மக்கள் மற்றும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து சென்ற நாடாகவும் இருந்தது. ஏற்றுமதியில் பல துறைகளில் முன்னணியில் இருந்த நாடு. அவர்களுக்கே இந்த நிலை வந்திருப்பதால் அதில் இருந்து நாம் கற்றுக் கொள்ளவேண்டிய பாடம் உள்ளது.

அதாவது தன்னிச்சையாக முடிவுகளை அரசு எடுக்காமல் பொருளாதார நிபுணர்களை கலந்தாலோ சித்தும், எதிர்க்கட்சிகளின் கருத்துக்களை கேட்டும் எடுத்த முடிவுகள்தான் நிலைத்த முடிவுகளாக, நல்ல விளைவுகள் தரக்கூடிய முடிவுகளாக இருக்கும். தற்போது நம் நாட்டில் பணவீக்கம் உயர்ந்திருக்கிறது.

விலைவாசி உயர்வுக்கு அந்நிய காரணிகளும், உள்நாட்டு காரணிகளும் இருக்கின்றன. இரண்டும் சேர்த்துத்தான் விலைவாசி உயர்வை தீர்மானிக்கிறது. உள்நாட்டு காரணிகளை நிர்ணயிப்பதில் மத்திய அரசு முற்றிலும் தவறிவிட்டது.

3, 4 மாதங்களுக்கு முன்பே பெட்ரோல், டீசல், எரிவாயு விலையை அரசு குறைத்திருக்க வேண்டும். ஜி.எஸ்.டி.வரிவிகிதம் மற்றும் சுங்கவரியை குறைத்திருக்க வேண்டும். இதையெல்லாம் தடுக்க அரசு தவறி விட்டது. அதனால்தான் தற்போது பணவீக்கம் கட்டுப்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இப்போது உக்ரைன் போர், கச்சா எண்ணை விலை உயர்வு போன்றவையும் சேர்ந்துகொண்டு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

எனவே மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் சேர்ந்து முடிவு எடுத்தால்தான் பணவீக்கத்தை கட்டுப்படுத்த முடியும். தற்போது வட்டி விகிதத்தை உயர்த்தியிருப்பதை ஒன்னரை மாதங்களுக்கு முன்பே ரிசர்வ் வங்கி செய்திருக்க வேண்டும். அரசின் தாமதமான முடிவுகள் தான் தற்போது விலைவாசி உயர்வுக்கான காரணமாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News