தமிழ்நாடு

ஆம்னி பஸ்களை கிளாம்பாக்கத்திற்கு மாற்ற அவகாசம் வேண்டும்: உரிமையாளர்கள் அரசுக்கு கோரிக்கை

Published On 2024-01-18 08:55 GMT   |   Update On 2024-01-18 08:55 GMT
  • பொங்கல் கழித்து 24-ந்தேதி இரவு முதல் கோயம்பேட்டில் இருந்து ஆம்னி பஸ்களை இயக்குவதற்கு பதிலாக கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
  • கிளாம்பாக்கத்தில் இருந்து ஆம்னி பஸ்களை இயக்க தேவையான வசதிகளை அரசு செய்து தர வேண்டும்.

சென்னை:

சென்னையை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டு கடந்த மாதம் இறுதியில் செயல்பாட்டிற்கு வந்தது.

சென்னை நகருக்குள் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்கள் அனைத்தும் கிளாம்பாக்கத்தில் இருந்து தற்போது இயக்கப்படுகின்றன.

அனைத்து ஆம்னி பஸ்களும் அங்கிருந்து இயக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. பொங்கல் கழித்து 24-ந்தேதி இரவு முதல் கோயம்பேட்டில் இருந்து ஆம்னி பஸ்களை இயக்குவதற்கு பதிலாக கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால் ஆம்னி பஸ்களை 24-ந்தேதி முதல் இயக்குவதற்கு ஏதுவான சூழல் இல்லாததால் சிறிது கால அவகாசம் வேண்டும் என்று உரிமையாளர்கள் தரப்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க மாநில தலைவர் அன்பழகன் கூறியதாவது:-

கிளாம்பாக்கத்தில் இருந்து ஆம்னி பஸ்களை இயக்க தேவையான வசதிகளை அரசு செய்து தர வேண்டும். முடிச்சூர் பைபாஸ் சாலை அருகே இதற்காக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. 700-800 பஸ்களை நிறுத்துவதற்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தை தயார் செய்து தர வேண்டும்.

ஆம்னி பஸ்களை நிறுத்தி இயக்குவதற்கு இடம் தயார் செய்து தரும் வரை கோயம்பேட்டில் இருந்து இயக்க அனுமதிக்க வேண்டும். அதனால் அரசு சிறிது காலம் அவகாசம் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News