தமிழ்நாடு செய்திகள்

ஆம்னி பஸ் தலைகுப்புற பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து- 36 பயணிகள் உயிர் தப்பினர்

Published On 2023-02-04 12:18 IST   |   Update On 2023-02-04 12:18:00 IST
  • நள்ளிரவு நடந்த இந்த விபத்து பயணிகள் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
  • செம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செம்பட்டி:

தேனி மாவட்டம் போடி அருகில் உள்ள தேவாரத்தில் இருந்து ஆம்னிபஸ் நேற்று இரவு சென்னைக்கு புறப்பட்டது. இந்த பஸ்சை ராயப்பன்பட்டியை சேர்ந்த சுரேஷ் (50) என்பவர் ஓட்டிவந்தார்.

பஸ்சில் 36 பயணிகள் அமர்ந்திருந்தனர். நள்ளிரவு 12 மணியளவில் திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகில் உள்ள வீரசிக்கம்பட்டி பிரிவு அருகே பஸ் வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இதனால் பஸ்சில் தூங்கிக் கொண்டிருந்த பயணிகள் அலறிஅடித்து கூச்சலிட்டனர்.

உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதுகுறித்து செம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் நெடுஞ்சாலை ரோந்து போலீசாரும் அங்கு விரைந்து வந்தனர். இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

விபத்தில் டிரைவர் சுரேஷ், போடியை சேர்ந்த காமாட்சி (70), சென்னையை சேர்ந்த சரஸ்வதி (40), வெள்ளைத்தாய் (58), முனீஸ்வரன் (33) ஆகியோர் படுகாயங்களுடன் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். மற்றவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டதால் அவர்கள் முதலுதவி சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினர்.

நள்ளிரவு நடந்த இந்த விபத்து பயணிகள் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் செம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News