தனியார் கருணை இல்லத்தில் உணவு வழங்காமல் தவித்த 61 முதியோர்கள் மீட்பு
- 2017-ம் ஆண்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. ஆனால், கருணை இல்லம் செயல்பட கோர்ட்டு ஆணை பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
- சமூக நலத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள குகையநல்லூர் கிராத்தில் கருணை இல்லம்' என்ற பெயரில் தனியார் முதியோர் இல்லம் செயல்பட்டு வருகிறது. இந்த இல்லத்தில் தங்கியுள்ள முதியோர்கள் துன்புறுத்தப்படுவதாகவும், சரியான உணவு, தங்குமிட வசதி இல்லை என்றும் வேலூர் மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் வந்தது.
அதன்பேரில், உதவி கலெக்டர் பூங்கொடி தலைமையில் காட்பாடி தாசில்தார் ஜெகதீஸ்வரன், சமூகநலத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் அந்த முகாமில் நேற்று மாலை திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, அந்த இல்லத்தில் 37 ஆண்கள், 32 பெண்கள் என மொத்தம் 69 பேர் தங்கியிருப்பதும் அவர்களுக்கு உரிய வசதிகள் இல்லாமல் துன்புறுத்தப்படுவது தெரியவந்தது.
இதையடுத்து, அங்கிருந்து 61 பேரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர், வாலாஜா, அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அந்த இல்லத்தில் தற்போது 8 பேர் மட்டும் தங்கியுள்ளனர். அவர்களின் பாதுகாப்பு தொடர்பாக வருவாய்த்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
இது தொடர்பாக வருவாய்த்துறை அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது,
இந்த இல்லம் ஏற்கனவே 2017-ம் ஆண்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. ஆனால், கருணை இல்லம் செயல்பட கோர்ட்டு ஆணை பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர். அது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், கருணை இல்லத்தில் தங்கியுள்ளவர்களை அடித்து துன்புறுத்துவது உறுதியானதால் 69 பேரில் 61 பேரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பியுள்ளோம்.
பின்னர் அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். மீதமுள்ள 8 பேரை வேறு முதியோர் இல்லத்துக்கு மாற்றுவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தனர்.
தொடர்ந்து சமூக நலத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.