தமிழ்நாடு செய்திகள்

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா சாக்லேட் மற்றும் கைதான வாலிபருடன் ரெயில்வே போலீசார்.


காட்பாடியில் ரெயிலில் கடத்தி வந்த 40 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்- ஒடிசா வாலிபர் கைது

Published On 2022-10-08 11:55 IST   |   Update On 2022-10-08 11:55:00 IST
  • 40 கிலோ கஞ்சா போதை சாக்லேட்டுகள் இருந்தன. இதனை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
  • கோவையில் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்த கும்பல் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வேலூர்:

மாணவர்கள் இளைஞர்கள் இடையே போதை கலாசாரம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. கஞ்சா, போதை மாத்திரை என நாளுக்கு நாள் புதிய புதிய போதைப் பழக்க வழக்கங்கள் ஏற்பட்டு வருகிறது.

ஒடிசா, ஆந்திர மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு கஞ்சா கடத்தி வருகின்றனர்.

இதனை தடுக்க ஆந்திர மாநில எல்லைகளில் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.காட்பாடி, ஜோலார்பேட்டை, அரக்கோணம் ஆகிய இடங்களில் வட மாநிலங்களில் இருந்து வரும் ரெயில்களில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

ஒடிசாவில் இருந்து பெங்களூரு கே.ஆர் புரம் செல்லும் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று அதிகாலை காட்பாடி ரெயில் நிலையத்திற்கு வந்தது.

அதில் ரெயில்வே போலீசார் சோதனை நடத்தினர். அப்போது எஸ் 5 பெட்டியில் சீட்டுகளுக்கு அடியில் 5 கருப்பு நிற பை மற்றும் 3 பெரிய பிளாஸ்டிக் மூட்டைகளில் கஞ்சா பதுக்கி வைத்திருந்தனர்.

அதில் 40 கிலோ கஞ்சா போதை சாக்லேட்டுகள் இருந்தன. இதனை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

அதனை கடத்தி வந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பிஜய்குமார் (வயது 28) என்பவரை கைது செய்தனர்.

பெங்களூரு, சென்னை, கோவை பகுதிகளில் கஞ்சா சாக்லேட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது. கோவையில் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்த கும்பல் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தற்போது கடத்திவரப்பட்ட கஞ்சா சாக்லேட்டுகள் பெங்களூருக்கு கடத்தி சென்றது தெரிய வந்துள்ளது.

அங்கிருந்து சென்னை, கோவை உள்பட தமிழகத்தின் பிறபகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகிறதா என்று அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News