தமிழ்நாடு

தேசிய விளையாட்டு போட்டிகளில் தமிழக மாணவர்கள் பங்கேற்காததற்கு அரசின் நிர்வாக திறமையின்மையே காரணம்- ஓபிஎஸ்

Published On 2023-06-12 03:59 GMT   |   Update On 2023-06-12 03:59 GMT
  • விளையாட்டிற்கான இடஒதுக்கீடு மூலம் மாணவ, மாணவியர் மருத்துவம், பொறியியல், சட்டம் போன்ற படிப்புகளில் சேரமுடியும்.
  • தவறுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே எல்லோரின் எதிர்பார்ப்பு.

சென்னை:

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

அகில இந்திய மாணவர் விளையாட்டு அமைப்பு சார்பில் ஆண்டுதோறும் நீச்சல், கூடைப்பந்து, மல்யுத்தம் உள்ளிட்ட 32 விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. நடப்பாண்டிற்கான விளையாட்டு போட்டிகள் இம்மாதம் 6-ந்தேதி ஆரம்பித்து 12-ந்தேதி முடிவடைய உள்ளது. இந்தப் போட்டிகளில் கலந்து கொண்டு தங்கப் பதக்கம் பெறும் மாணவர்களுக்கு 190 புள்ளிகளும், வெள்ளிப் பதக்கம் பெறும் மாணவர்களுக்கு 160 புள்ளிகளும், வெண்கலப் பதக்கம் பெறும் மாணவர்களுக்கு 130 புள்ளிகளும், பங்குபெற்ற மாணவர்களுக்கு 50 புள்ளிகளும் வழங்கப்படும். இதன்மூலம், விளையாட்டிற்கான இடஒதுக்கீடு மூலம் மாணவ, மாணவியர் மருத்துவம், பொறியியல், சட்டம் போன்ற படிப்புகளில் சேரமுடியும்.

ஆனால் இந்த ஆண்டு மாணவர்களின் பட்டியலை தமிழக அரசு அனுப்பவில்லை. இந்த தவறுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே எல்லோரின் எதிர்பார்ப்பு.

இதில் உள்ள உண்மைத் தன்மையை வெளிக்கொணரும் வகையில், தமிழ்நாட்டின் சார்பில் கலந்து கொள்ளும் மாணவர்களின் பட்டியலை அனுப்புமாறு அகில இந்திய மாணவர் விளையாட்டு அமைப்பு எழுதிய கடிதத்தையும், அந்தக் கடிதம் யாருடைய மின்னஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்ற விவரத்தையும் தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டும். இதுபோன்ற தவறு இனி வருங்காலங்களில் நிகழாது என்பதை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News