நீலகிரியில் 91 சதவீதம் அதிக மழை- 62 வீடுகள் சேதம்
- நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது.
- நீலகிரி மாவட்டத்தில் 62 வீடுகள் பகுதியாகவும், ஒரு வீடு முழுமையாகவும் சேதமடைந்துள்ளது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. மழையால் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்து மின் கம்பங்கள் சேதம் அடைந்துள்ளன. மேலும் மண்சரிவும் ஏற்பட்டு வீடுகள் சேதம் அடைந்துள்ளன. நீரில் மூழ்கி விவசாய பயிர்களும் நாசமாகி உள்ளன.
பாதிக்கப்பட்ட இடங்களை அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், செந்தில் பாலாஜி, வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து அதிகாரிகளும் அங்கு ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஊட்டியில் உள்ள கோடப்பமந்து கால்வாயினை தமிழக அரசு மாற்றுத் திறனாளிகள் நலத் துறைச் செயலரும், நீலகிரி மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான ஆனந்தகுமாா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்குப் பருவ மழை 91 சதவீதம் அதிகமாக பெய்துள்ளது. மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையினால் ஏற்பட்ட மண் சரிவு, வீடுகள் சேதம், மரங்கள் சாய்வது போன்ற பாதிப்புகள் குறித்து வருவாய்த் துறை, மின்துறை, வனத் துறை அமைச்சா்கள் ஆகியோரால் ஆய்வு செய்யப்பட்டது.
கோடப்பமந்து கால்வாய் தூா்வாரப்பட்டு இருந்தாலும், மழை அதிகமாக பெய்யும்போது சில நேரங்களில் கால்வாயில் இருந்து தண்ணீா் வெளியேறுகிறது. நகராட்சி மற்றும் பொதுப் பணித் துறைகளிடம் இது தொடா்பாக முழு விவரங்கள் பெறப்பட்டு நிரந்தர தீா்வு ஏற்படுத்த அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்.
முதல்-அமைச்சரின் உத்தரவுப்படி கன மழையினால் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்த மதிப்பீடுகள் தயாா் செய்து மாவட்ட கலெக்டர் மூலம் அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் கூறுகையில் நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தென்மேற்குப் பருமழையினால் இதுவரை ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கான நிவாரணங்கள் உடனுக்குடன் வழங்கப்பட்டு வருகிறது.இதுவரை நீலகிரி மாவட்டத்தில் 62 வீடுகள் பகுதியாகவும், ஒரு வீடு முழுமையாகவும் சேதமடைந்துள்ளது.
கன மழையினால் ஒரு நபா் உயிரிழந்துள்ளாா். அவரது குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சரின் உத்தரவின்படி நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது என்றாா்.