தமிழ்நாடு

பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு- ஏகனாபுரத்தில் மொட்டையடித்து கிராம மக்கள் நூதன போராட்டம்

Published On 2023-04-16 11:10 GMT   |   Update On 2023-04-16 11:10 GMT
  • புதிய விமானநிலையம் அமைப்பதற்கு பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட விவசாய நிலங்கள், வீடுகள் கையகப்படுத்தப்பட உள்ளன.
  • புதிய விமான நிலையத்துக்கு எதிரான ஏகனாபுரம் கிராம மக்களின் போராட்டம் இன்று 264-வது நாளாக நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

காஞ்சிபுரம்:

சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் சுமார் 4,700 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ளது. இதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன.

புதிய விமானநிலையம் அமைப்பதற்கு பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட விவசாய நிலங்கள், வீடுகள் கையகப்படுத்தப்பட உள்ளன. இதற்கு 13 கிராம மக்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

விவசாய நிலங்களை கையகப்படுத்தி புதிய விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் கிராமசபை கூட்டத்தின் போது தீர்மானங்கள் நிறைவேற்றி வருகின்றனர்.

புதிய விமானநிலையம் அறிவிப்பு வந்த நாள் முதல் ஏகனாபுரம் கிராமமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆண்கள் மொட்டையடித்து நூதன போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்து இருந்தனர்.

அதன்படி இன்று காலை ஏகனாபுரம் பஸ்நிலையம் அருகே உள்ள அம்பேத்கர் சிலை அருகே கிராமத்தை சேர்ந்த ஏராளமான ஆண்கள் மொட்டை அடித்தனர். மேலும் திருவோடு ஏந்தி பிச்சை எடுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது புதிய விமான நிலையத்துக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இதேபோல் பெண்கள் ஒப்பாரி வைத்து போராட் டம் நடத்தினர். இதனால் ஏகனாபுரம் கிராமம் பரபரப்பாக காணப்படுகிறது.

புதிய விமான நிலையத்துக்கு எதிரான ஏகனாபுரம் கிராம மக்களின் போராட்டம் இன்று 264-வது நாளாக நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News