தமிழ்நாடு

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று கோவை வருகை- நாளை மாலை பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்

Published On 2023-03-04 04:12 GMT   |   Update On 2023-03-04 04:12 GMT
  • இலவச திருமண நிகழ்ச்சி நடைபெற உள்ள இடத்தை அமைச்சர் செந்தில்பாலாஜி நேரில் பார்வையிட்டு அங்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை கட்சியினரிடம் கேட்டறிந்தார்.
  • அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகையை முன்னிட்டு கோவையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கோவை:

கோவையில் நாளை தி.மு.க சார்பில் 70 ஜோடிகளுக்கு இலவச திருமணம், பொதுக்கூட்டம் நடக்கிறது.

இதில் தமிழக இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இதற்காக அவர் கரூரில் இருந்து கார் மூலமாக இன்று இரவு கோவைக்கு வருகிறார்.

அவருக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் தி.மு.கவினர் ஏராளமானோர் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர். பின்னர் அவர் கோவையில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் தங்குகிறார்.

நாளை காலை 10 மணிக்கு கோவை-அவினாசி சாலையில் உள்ள பிருந்தாவன் மஹாலில் தி.மு.க. சார்பில் 70 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடக்கிறது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று 70 ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தி வைக்கிறார்.

பின்னர் காலை 11.30 மணிக்கு கொடிசியா அருகே ரேக்ளா போட்டியை தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து போட்டியை கண்டு ரசித்து, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்குகிறார்.

பகல் 12.10 மணியளவில் கார் மூலமாக கோவை வ.உ.சி. மைதானத்திற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகிறார். அங்கு தேசிய அளவிலான மகளிர் சுய உதவிக்குழு பொருட்களின் சாரஸ் கண்காட்சியை தொடங்கி வைக்கிறார்.

இந்த விழாவில் கலெக்டர் கிராந்திகுமார் பாடி, அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். பின்னர் மாலை 5.30 மணிக்கு கொடிசியா மைதானத்தில் தி.மு.க சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கிறார்.

பொதுக்கூட்டத்தில் தி.மு.கவின் மூத்த முன்னோடிகள் 2 ஆயிரம் பேருக்கு பொற்கிழிகளை வழங்கி சிறப்புரையாற்றுகிறார். இதில் அமைச்சர் செந்தில் பாலாஜி, தி.மு.க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர்.

இந்த நிலையில் இலவச திருமண நிகழ்ச்சி நடைபெற உள்ள இடத்தை அமைச்சர் செந்தில்பாலாஜி நேரில் பார்வையிட்டு அங்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை கட்சியினரிடம் கேட்டறிந்தார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகையை முன்னிட்டு கோவையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News