பள்ளிக்கல்வி அதிகாரிகளுடன் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை: சென்னையில் 15-ந்தேதி நடக்கிறது
- பாடப்புத்தகங்கள் வினியோகிக்கப்பட்டது, மாணவர் சேர்க்கை, கல்வி உபகரணங்கள் முறையாக வழங்கப்பட்டது குறித்து ஆய்வு செய்வதற்காக ஆலோசனை கூட்டத்திற்கு பள்ளிக்கல்வி துறை ஏற்பாடு செய்துள்ளது.
- அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் வருகிற 15-ந்தேதி சென்னையில் நடக்கிறது.
சென்னை:
தமிழகத்தில் உள்ள அரசு, உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகம், நோட்டு புத்தகம் அரசு சார்பில் வழங்கப்படுகிறது.
1 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் ஏழை-எளிய மாணவர்கள் இதன் மூலம் பயன் அடைந்து வருகிறார்கள்.
2022-2023-ம் கல்வி ஆண்டிற்கான பாடப்புத்தகங்கள் பள்ளி திறந்து முதல் நாள் முதல் வழங்கும் பணி தொடங்கின.
அதற்கு முன்னதாகவே அனைத்து மாவட்டங்களுக்கும் பாடப்புத்தகங்கள் அனுப்பப்பட்டன. அவை பள்ளிகளுக்கு முதன்மை கல்வி அதிகாரிகள் கண்காணிப்பில் சென்றன. வகுப்புகள் படிப்படியாக தொடங்கியவுடன் மாணவர்களுக்கு பள்ளிகள் திறந்து ஒரு மாதம் ஆகியுள்ள நிலையில் பாடப்புத்தகங்கள் மாணவர்களுக்கு முறையாக கிடைக்கவில்லை என்ற புகார்கள் வந்தது. அரசியல் கட்சி தலைவர்களும் பாடப்புத்தகங்களை முறையாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.
இந்த நிலையில் பாடப்புத்தகங்கள் வினியோகிக்கப்பட்டது, மாணவர் சேர்க்கை, கல்வி உபகரணங்கள் முறையாக வழங்கப்பட்டது குறித்து ஆய்வு செய்வதற்காக ஆலோசனை கூட்டத்திற்கு பள்ளிக்கல்வி துறை ஏற்பாடு செய்துள்ளது.
அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் வருகிற 15-ந்தேதி சென்னையில் நடக்கிறது.
இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, செயலாளர் காகர்லா உஷா, ஆணையாளர்கள் நந்தகுமார் மற்றும் இணை இயக்குனர்கள் கலந்து கொள்கிறார்கள்.
கூட்டத்தில் சீருடை வினியோகம், எண்ணும் எழுத்தும் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல், துணை தேர்வு, இல்லம் தேடிக் கல்வி திட்டம் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்படுகிறது.
மேலும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைபிடிக்க வலியுறுத்துவது, மாணவ-மாணவிகளுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டால் வகுப்புகளை எவ்வாறு நடத்துவது என்பது குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.