தமிழ்நாடு செய்திகள்

மேட்டூர் அணை நீர்மட்டம் 54 அடியாக சரிந்தது

Published On 2023-08-15 09:22 IST   |   Update On 2023-08-15 09:22:00 IST
  • அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.
  • அணையில் நீர் குறைவாக உள்ளதால் டெல்டா மாவட்ட விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

சேலம்:

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, கரூர், தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கடலூர், நாகப்பட்டினம் ஆகிய 12 மாவட்டங்களில் சுமார் 17.37 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் குறுவை பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து வழக்கமாக ஜூன் மாதம் 12-ந்தேதி தண்ணீர் திறக்கப்படும். அதன்படி நடப்பாண்டில் கடந்த ஜூன் மாதம் 12-ந்தேதி குறுவை சாகுபடிக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் காவிரியில் திறந்து விடப்பட்டது. இதையடுத்து நீர் இருப்பை கருத்தில் கொண்டு தண்ணீர் அதிகரித்தும், குறைத்தும் பாசனத்துக்கு திறந்து விடப்பட்டு வருகிறது.

தற்போது நீர் இருப்பு குறைவாக உள்ளதால் மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லாததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக சரிந்து வருகிறது. நேற்று வினாடிக்கு 2 ஆயிரத்து 415 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து ஆயிரத்து 478 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 54.10 அடியாக இருந்தது.

இனி வரும் நாட்களில் இதே நிலை நீடித்தால் நீர்மட்டம் மேலும் வேகமாக சரிய வாய்ப்புள்ளது. அணையில் நீர் குறைவாக உள்ளதால் டெல்டா மாவட்ட விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News