தமிழ்நாடு செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 165 கனஅடியாக அதிகரிப்பு

Published On 2023-07-24 09:37 IST   |   Update On 2023-07-24 09:37:00 IST
  • இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை கை கொடுக்காததால் அணைக்கு வரும் நீர்வரத்தும் குறைந்து காணப்பட்டது.
  • அணைக்கு வரும் தண்ணீரை விட அதிகளவில் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதால் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்தது.

மேட்டூர்:

மேட்டூர் அணையில் இருந்து கடந்த மாதம் ஜூன் மாதம் 12-ந்தேதி முதல் டெல்டா பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்ட போது நீர்மட்டம் 103.35 அடியாக இருந்தது. இந்த நிலையில் மேட்டூர் அணையில் இருந்து தொடர்ந்து தேவைக்கு ஏற்ப தண்ணீர் குறைத்தும், அதிகரித்தும் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை கை கொடுக்காததால் அணைக்கு வரும் நீர்வரத்தும் குறைந்து காணப்பட்டது. அணைக்கு வரும் தண்ணீரை விட அதிகளவில் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதால் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்தது.

இந்த நிலையில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பருவ மழை தீவிரம் அடைந்து வருகிறது. இதனால் அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

இதனால் கபினி, கிருஷ்ண ராஜசாகர் அணைகளில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 987 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. அந்த தண்ணீர் நாளை முதல் தமிழத்துக்கு வரத்தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது கர்நாடகாவில் மழை அதிகரித்து உள்ளதால் தமிழகத்துக்கு திறக்கப்படும் தண்ணீர் அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 67.91 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 165 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News