தமிழ்நாடு செய்திகள்

மதுரை மாட்டுத்தாவணி மீன் மார்க்கெட்டில் முத்திரை இல்லாத தராசுகளை பறிமுதல் செய்த அதிகாரிகள்

Published On 2022-12-18 11:21 IST   |   Update On 2022-12-18 11:21:00 IST
  • வியாபாரிகள் அரசு முத்திரை இல்லாத தராசுகளை பயன்படுத்தி வருவதாக தொழிலாளர் நலத்துறைக்கு தெரிய வந்தது.
  • மதுரை மாட்டுத்தாவணி மீன் மார்க்கெட்டில் அதிரடி சோதனை நடத்துவது என்று அதிகாரிகள் முடிவு செய்தனர்.

மதுரை:

மதுரை மாட்டுத்தாவணியில் மீன் மார்க்கெட் இயங்கி வருகிறது. இங்கு ராமேசுவரம், தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரக்கூடிய பல்வேறு வகையான மீன்கள் மொத்தமாகவும் சில்லறையாகவும் மீன்கள் விற்பனை செய்யப்படுகிறது.

இதற்காக அங்கு 100-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. தினமும் நூற்றுக்கணக்கான வியாபாரிகளும் வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் மாட்டுத்தாவணி மீன் மார்க்கெட்டில் வாங்கும் மீன்களின் எடை குறைவாக இருப்பதாக தொடர்ந்து புகார் வந்தது.

எனவே மாட்டுத்தாவணி மீன் சந்தையில் வியாபாரிகள் அரசு முத்திரையுடன் கூடிய தராசுகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று மதுரை தொழிலாளர் நலத்துறை உத்தரவிட்டது. இருந்த போதிலும் ஒரு சில வியாபாரிகள் அரசு முத்திரை இல்லாத தராசுகளை பயன்படுத்தி வருவதாக தொழிலாளர் நலத்துறைக்கு தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து மதுரை மாட்டுத்தாவணி மீன் மார்க்கெட்டில் அதிரடி சோதனை நடத்துவது என்று அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி மதுரை மாவட்ட தொழிலாளர் துறை அமலாக்கபிரிவு உதவி கமிஷனர் மைவிழிசெல்வி தலைமையில் 25 அதிகாரிகள் அடங்கிய குழுவினர் இன்று காலை மாட்டுத்தாவணி மீன் மார்க்கெட்டுக்கு வந்தனர்.

அப்போது வியாபாரிகள் பயன்படுத்தும் தராசுகளில் அரசு முத்திரை உள்ளதா? என்பது தொடர்பாக சுமார் ஒரு மணி நேரம் சோதனை நடத்தப்பட்டது. இதில் 26 வியாபாரிகள் அரசு முத்திரை இல்லாத தராசுகளை பயன்படுத்துவது தெரியவந்தது. அந்த தராசுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

அதிகாரிகளின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் சோதனை நடத்திய அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த போலீசார், பேச்சுவார்த்தை நடத்தி வியாபாரிகளை கலைந்துபோக செய்தனர்.

இதை தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட தராசுகள், தொழிலாளர் நலத்துறை அலுவலகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதனால் அந்த பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

இது தொடர்பாக மதுரை மாவட்ட தொழிலாளர் நலத்துறை அமலாக்க உதவி கமிஷனர் மைவிழி செல்வி கூறியதாவது:-

மதுரை மாட்டுத்தாவணி மீன் மார்க்கெட்டில் வியாபாரிகள் அனைவரும் அரசு முத்திரையுடன் கூடிய தராசுகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று ஏற்கனவே உத்தரவிடப்பட்டு இருந்தது. அதனை வியாபாரிகள் சரியாக பின்பற்றுகிறார்களா? என்பதை கண்காணிக்கும் வகையில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

இதில் அரசு முத்திரை இல்லாத தராசுகளை பயன்படுத்தியதாக 26 தராசுகளை பறிமுதல் செய்துள்ளோம். அவர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிப்பதற்கான நோட்டீசுகள் வழங்கப்பட்டு உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News