தமிழ்நாடு செய்திகள்

மதுரை நகரில் காலை 8 மணிக்கு ஆவின் வாகனம் வந்தது: முகவர்கள் பால் பாக்கெட்டுகளை திருப்பி அனுப்பியதால் பரபரப்பு

Published On 2023-02-25 12:18 IST   |   Update On 2023-02-25 12:18:00 IST
  • மதுரை ஆவின் நிறுவனத்தில் இருந்து பால் வாகனங்கள் அதிகாலை 3 மணிக்கு கிளம்பி விடும்.
  • மதுரை மாவட்டத்தில் பெரும்பாலான முகவர்கள் ஆவின் பாலை திருப்பி அனுப்பியதால், சுமார் ஒரு லட்சம் லிட்டர் பால் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

மதுரை:

மதுரை அண்ணாநகரில் ஆவின் பால் நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு பால் பாக்கெட்டுகள் மற்றும் தயிர் தயாராகின்றன. இவை சுமார் 50 போக்குவரத்து தடங்கள் வழியாக, மண்டலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

ஏஜெண்டுகள் மூலம் பொது மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மதுரை ஆவின் நிறுவனத்தில் இருந்து பால் வாகனங்கள் அதிகாலை 3 மணிக்கு கிளம்பி விடும். இன்று காலை 8 மணிக்குதான் வாகனம் வந்தது. இதன் காரணமாக முகவர்கள் பாலை வாங்காமல் திருப்பி அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து பால் முகவர்கள் கூறுகையில், பொதுமக்கள் காலை 5 மணிக்கு பால் வாங்க வருவார்கள். அதிகாலை 3 மணிக்குள் பால் வாகனம் வந்து விடும். நாங்கள் வாடிக்கையாளருக்கு குறித்த நேரத்துக்குள் விற்பனை செய்து வந்தோம். இப்போது ஆவின் பால் வாகனம், காலை 7 மணிக்கு மேல் வருகிறது.

பால் வாங்குவதற்காக வரும் பொதுமக்கள், தனியார் பாலை வாங்கிக் கொண்டு வீடு திரும்பி விடுகின்றனர். ஆவின் பாலை வாங்க வாடிக்கையாளர்கள் முன் வராததால், நஷ்டம் ஏற்படுகிறது. நாங்கள் இன்று காலை 8 மணிக்கு வந்த ஆவின் பால் வாகனத்தை திருப்பி அனுப்பி வருகிறோம் என்று தெரிவித்தனர்.

ஆவின் நிறுவன ஊழியர் சங்கத்தைச் சேர்ந்தவர்களிடம் பேசிய போது, மதுரை ஆவின் நிறுவனத்தில் போதிய அளவுக்கு நிரந்தர ஊழியர்கள் இல்லை. ஆளுங்கட்சி பிரமுகர் ஆதரவுடன் இயங்கும் 2 தனியார் நிறுவனங்கள், கான்ட்ராக்ட் எடுத்து ஊழியர்களை நியமித்துள்ளன. அவர்கள் சரிவர பணியில் ஈடுபடுவது இல்லை.

இதனை தட்டி கேட்ட அதிகாரிக்கு சமீபத்தில் அடி உதை விழுந்தது. அந்த வழக்கில் குற்றவாளி இதுவரை கைது செய்யப்படவில்லை. அதிகாரிகள் ஆவின் தற்காலிக ஊழியர்களிடம் வேலை வாங்க பயப்படுவதாக தெரிவித்தனர்.

மதுரை ஆவின் பால் நிறுவன அதிகாரி கூறுகையில், மதுரை மண்டலத்திற்கு ஒட்டு மொத்தமாக 1.38 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இதற்காக விவசாயிகளுக்கு லிட்டருக்கு ரூ.33 வழங்கப்படுகிறது. தனியார் நிறுவனங்கள் லிட்டருக்கு ரூ.40 கொடுக்கின்றன. மதுரை மாவட்டத்தில் பெரும்பாலான விவசாயிகள், தனியார் நிறுவனங்களை நாடி செல்கின்றனர். மதுரை மாவட்டத்திற்கு 1.60 லட்சம் லிட்டர் பால் தேவை. எங்களுக்கு 1.35 லட்சம் லிட்டர் பால் மட்டுமே கிடைக்கிறது.

ஆவின் நிறுவனத்தில் பால் அடுக்கி வைப்பது, பிரித்து வைப்பது உள்ளிட்ட பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு ஆட்கள் பற்றாக்குறை உள்ளது. ஆவின் பாலை சில நாட்களில் முகவருக்கு உரிய நேரத்தில் அனுப்ப முடியவில்லை. இருந்த போதிலும் இந்த பிரச்சினை விரைவில் சரி செய்யப்படும் என்றார்.

மதுரை மாவட்டத்தில் பெரும்பாலான முகவர்கள் ஆவின் பாலை திருப்பி அனுப்பியதால், சுமார் ஒரு லட்சம் லிட்டர் பால் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News