தமிழ்நாடு செய்திகள்

கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாம்: தூத்துக்குடியில் அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

Published On 2023-11-06 10:32 IST   |   Update On 2023-11-06 10:32:00 IST
  • மீனவர்களின் நலன் காக்கின்ற அரசாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு திகழ்ந்து வருகிறது.
  • மீனவர்களுக்கு என்னென்ன நல உதவிகள் செய்ய வேண்டுமோ அத்தனையும் செய்து வருகிறது.

தூத்துக்குடி:

கால்நடை பராமரிப்புத்துறை மூலம் தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் 4-வது சுற்றினை இன்று தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் தெற்கு சிலுக்கன்பட்டி கிராமத்தில் மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் தொடங்கி வைத்து பார்வையிட்டனர். பின்னர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் படி உள்ளாட்சித்துறை, கால்நடைத்துறை, பால்வளத்துறை போன்ற அனைத்து துறைகளும் சேர்ந்து எல்லா கால்நடைகளுக்கும் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் 21 நாட்கள் நடைபெற உள்ளது.

கால்நடைகளுக்கு இந்த கோமாரி நோய் தாக்கினால் வாயில் கால்களில் புண் ஏற்படும், பால் கறப்பது குறைந்து விடும் மற்றும் சினையாக இருக்கும் மாடுகள் கரு சிதைவும் ஏற்படும். அது மட்டுமில்லாமல் கன்றுக்குட்டிகள் இறப்பதற்கும் வாய்ப்புண்டு.

அந்த நிலைகளை எல்லாம் மாற்றுகின்ற வகையிலே தமிழகம் முழுவதும் 21 நாட்கள் நடைபெறுகிற இந்த முகாமில் தடுப்பூசிகள் போடப்பட உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலும் இது போன்று அனைத்து பகுதிகளிலும் தடுப்பூசிகள் போடப்பட உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி மீன்வளத்துறை சிறப்பாக செயல்படுகிறது.

மீனவர்களின் நலன் காக்கின்ற அரசாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு திகழ்ந்து வருகிறது. மீனவர்களுக்கு என்னென்ன நல உதவிகள் செய்ய வேண்டுமோ அத்தனையும் செய்து வருகிறது. மீன் வளர்ச்சியிலும், மீன் குஞ்சுகள் உற்பத்தியிலும், என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமோ அதனை மேற்கொள்ளவும் தமிழகம் உயர்வதற்கான வழிவகைகளை மீன்வளத்துறைக்கு முதல்வர் தந்திருக்கின்றார்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி, சண்முகையா எம்.எல்.ஏ., கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குனர் சஞ்சீவிராஜ் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News