தமிழ்நாடு

வகுப்பறையில் பாடம் எடுத்த போது மாரடைப்பால் ஆசிரியர் மரணம்- மாணவர்கள் கண்ணீர்

Published On 2023-07-05 06:57 GMT   |   Update On 2023-07-05 06:57 GMT
  • ஆசிரியர் சக்திவேலுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.
  • ஆசிரியர் சக்திவேல் இறந்தது பற்றி அறிந்ததும் அவர் வகுப்பு எடுத்த அறையில் இருந்த மாணவர்கள் சிலர் கண்ணீர் விட்டனர்.

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம், பாரதிதாசன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல்(வயது53).இவர் காஞ்சிபுரத்தில் உள்ள டாக்டர் பி.எஸ். ஸ்ரீனிவாசன் மாநகராட்சி மேல்நிலை பள்ளியில் தொழிற்கல்வி வகுப்பு ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

நேற்று காலை அவர் வழக்கம் போல் பள்ளிக்கு வந்தார். பின்னர் அவர் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தொழிற்கல்வி வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தார்.

அப்போது ஆசிரியர் சக்திவேலுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. அவர் வகுப்பறையிலேயே மயங்கி விழுந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் உடனடியாக பள்ளியில் உள்ள மற்ற ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

ஆசிரியர்கள் விரைந்து வந்து சக்திவேலை மீட்டு காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ஆசிரியர் சக்திவேல் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். ஆசிரியர் சக்திவேல் இறந்தது பற்றி அறிந்ததும் அவர் வகுப்பு எடுத்த அறையில் இருந்த மாணவர்கள் சிலர் கண்ணீர் விட்டனர்.

வகுப்பறையில் பாடம் எடுத்துக்கொண்டு இருந்த போது ஆசிரியர் சக்திவேல் இறந்த சம்பவம் பள்ளியில் உள்ள மற்ற ஆசிரியர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இறந்த ஆசிரியர் சக்திவேல் இதே பள்ளியில் தொழிற்கல்வி படிப்பு முடித்து 1994-ம் ஆண்டு பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலமாக அதே பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வந்தார். இதைத்தொடர்ந்து கடந்த 2002-ம் ஆண்டு முதல் அவர் நிரந்தர ஆசிரியராக பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது. அவருக்கு மனைவியும் கல்லூரியில் படிக்கும் 2 மகள்களும் உள்ளனர்.

Tags:    

Similar News