ஜேடர்பாளையம் அருகே தாய், மகன் தற்கொலை
- நிலத்தை விற்பது தொடர்பாக தாய், மகன் இருவருக்கும் இடையே பிரச்சனை இருந்து வந்தது.
- சொத்து பிரச்சினை தொடர்பாக தாய், மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே உள்ள மணல்மேடு பகுதியை சேர்ந்தவர் பாவாயி (வயது 75). இவரது மகன் ராசு (55). விவசாயி.
இந்த நிலையில் பாவாயிக்கு சொந்தமான நிலம் அப்பகுதியில் உள்ளது. இந்த நிலத்தை விற்பது தொடர்பாக தாய், மகன் இருவருக்கும் இடையே பிரச்சனை இருந்து வந்தது.
நிலத்தை விற்பதற்கு பாவாயி கையெழுத்திட மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் ராசு கடும் விரக்தி அடைந்தார்.
இதனிடையே சொத்தை விற்பதற்கு கையெழுத்து கேட்டு ராசு அடிக்கடி தகராறு செய்து வந்ததால் மனம் உடைந்த பாவாயி நேற்று இரவு வீட்டின் ஒரு அறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தாய் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்ததை பார்த்த அவரது மகன் ராசு அதிர்ச்சியில் உறைந்தார். தாயின் உடலை பார்த்து கதறி அழுதார்.
தனது தாய் உயிரை மாய்த்து விட்டார், இனிமேல் நான் வாழ்வதை விட சாவதே மேல் என முடிவு செய்த ராசு வீட்டில் வைத்திருந்த விஷ மாத்திரையை சாப்பிட்டார். இதனால் வயிறு வலிக்கவே சத்தம் போட்டு ராசு கதறினார்.
சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிவந்து பார்த்தபோது ராசு வாயில் நுரை தள்ளியவாறு மயங்கி கிடந்தார்.
உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் ராசுவை நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே ராசு இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து ஜேடர்பாளையம் போலீசார், பாவாயி உடலை மீட்டு பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இன்ஸ்பெக்டர் ரவி வழக்குப் பதிவு செய்து தாய்-மகன் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா? என தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
சொத்து பிரச்சினை தொடர்பாக தாய், மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.