தமிழ்நாடு செய்திகள்

வெளியூருக்கு அனுப்பபடும் பலாப்பழங்களை படத்தில் காணலாம்


பண்ருட்டியில் கடும் நஷ்டத்தில் மூழ்கிய பலாப்பழ வியாபாரிகள்

Published On 2022-06-15 10:48 IST   |   Update On 2022-06-15 10:48:00 IST
  • விவசாயிகள் பலா காயை பறிக்காமல் மரங்களிலேயே உள்ளோம் என்றனர்.
  • தமிழ்நாடு அரசு பண்ருட்டி பகுதியில் பலாப் பழம் பதனிடும் தொழிற்சாலை அமைத்திட வேண்டும் என்றார்.

பண்ருட்டி:

பண்ருட்டி என்றாலே நினைவுக்கு வருவது முந்திரி, பலா ஆகும். இங்கு செம்மண் நிறைந்த பகுதி காணப்படுவதால் இங்கு விளையும் பலாப்பழம் சுவை மிகுந்ததாக இருக்கும். இதனால் பண்ருட்டி பலாப் பழத்தை அனைவரும் விரும்பி வாங்குவார்கள்.

பண்ருட்டியை சுற்றியுள்ள காடாம்புலியூர், பலாப்பட்டு, நடுவீரப்பட்டு, கீழ்மாம்பட்டு, பணிக்கன் குப்பம், தாழம்பட்டு உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 30 ஆயிரம் ஏக்கரில் பலா சாகுபடி நடைபெற்று வருகிறது.

தற்போது சீசன் தொடங்கி உள்ளது. எனவே தினமும் 10, 20 லாரிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட டன்கள் பலாப்பழங்கள் விற்பனைக்காக அனுப்பப்படுகிறது.

பண்ருட்டியில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில்பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே குவியல்குவியலாய்லாக பலப்பழங்கள் வைத்து நூற்றுக்கணக்கானோர் விற்பனை செய்து வருகிறார்கள்.

இதனை அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பலாபழங்களைவாங்கி செல்கின்றனர்.

இந்த ஆண்டு பலாபழவிளைச்சல் அதிகம் என்பதால் இதன் விலை குறைந்துள்ளது . ஒரு பலா பழம் 100 ரூபாய்க்குதான் விற்பனை ஆகிறது. கடந்த ஆண்டு ரூ. 300 வரை விலை போனது.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில் பலா காயை பறிப்பதற்கான கூலி, அதை மார்க்கெட்டுக்கு கொண்டு செல்வதற்கான வாகனச் செலவுக்கு ஈடான தொகை கூட கிடைக்கவில்லை. இதனால் பல இடங்களில் விவசாயிகள் பலா காயை பறிக்காமல் மரங்களிலேயே உள்ளோம் என்றனர்.

இதுகுறித்து பண்ருட்டி மண்டி உரிமையாளர் நடுபிள்ளையார் குப்பம் பாலமுருகன் கூறுகையில் இந்த ஆண்டு விளைச்சல் அதிகரித்துள்ளதால் இதன் விலை போகவில்லை. தினசரி ஏராளமான பழங்கள் வெடித்து வீணாகிறது.

விலைகுறைந்ததால் வியாபாரிகளுக்கும், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. ஒரே நேரத்தில் பலா பழம் வரத்து அதிகம் உள்ளதால் விற்க முடியவில்லை. வெளியூர்களுக்கு லோடு அனுப்பினாலும் அதை விட பலாப்பழ வரத்து நாளுக்கு நாள் அதிகரித்து உள்ளது. பலாப்பழத்தை யாரும் வாங்குவார் இல்லை. இதனால்தான் விலை வீழ்ச்சியை பலாப்பழம் கண்டு உள்ளது.

எனவே தமிழ்நாடு அரசு பண்ருட்டி பகுதியில் பலாப் பழம் பதனிடும் தொழிற்சாலை அமைத்திட வேண்டும் என்றார்.

Similar News