பெரம்பலூர் அருகே பிரதமரின் திட்டத்தில் வீடு கட்டாமலேயே கட்டியதாக கூறி தாய்-மகன் பெயரில் பணம் மோசடி
- பெரம்பலூர் அருகே உள்ள லாடபுரத்தை சேர்ந்த சீரங்கம்மாள் என்பவரின் மகன் மணிகண்டன்.
- வீடு ஒதுக்கிய விபரங்கள், அதன் உண்மை தன்மை ஆகியவற்றை தணிக்கை செய்தால் மேலும் பல முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே உள்ள லாடபுரத்தை சேர்ந்த சீரங்கம்மாள் என்பவரின் மகன் மணிகண்டன். இவர் திருமணமாகி மனைவி, குழந்தைகளுடன் திருச்சியில் வசித்து வரும் நிலையில் லாடபுரத்தில் வீடுகட்ட அரசிடம் எந்த கோரிக்கையும் வைக்கவில்லை.
இந்தநிலையில் அவர் பெயரில் பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தில் வீடு ஒதுக்கீடு செய்து மூதாட்டி சீரங்கம்மாளின் வங்கி கணக்கு இணைக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்தது. வீடு எதுவும் கட்டாத சூழலில் வீடு கட்டியதாக கூறி சீரங்கம்மாளின் வங்கி கணக்கிற்கு மூன்று தவணைகளாக ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பணமும் வரவு வைக்கப்பட்டு இருந்தது.
இதற்கிடையே லாடபுரத்தை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அவரது கணவர் ஆகியோர் சீரங்கம்மாளை வங்கிக்கு அழைத்து சென்று, பஞ்சாயத்து பணம் உன் கணக்கில் தவறுதலாக ஏறியுள்ளது அதனை எடுத்து கொடுக்க சொல்லி பெற்றுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
வீடு கட்டியதாக வரவு வைக்கப்பட்ட ரூ.1 லட்சத்து 70 ஆயிரத்துடன் சீரங்கம்மாளின் சேமிப்பு பணம் ரூ.7 ஆயிரத்தையும் சேர்த்து எடுத்துக் கொண்டதாக தெரிகிறது. சீரங்கம்மாளும் அறியாமை காரணமாக ஊராட்சி மன்ற தலைவர் கூப்பிடும் போதெல்லாம் வங்கிக்கு சென்று பணத்தை எடுத்துக் கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் தன்பெயரில் வீடு ஒதுக்கீடு செய்து அதனை கட்டாமலேயே பண மோசடி நடந்ததை அறிந்து சீரங்கம்மாளின் மகன் மணிகண்டன் அதிர்ச்சி அடைந்தார். மேலும் இது தொடர்பாக ஊராட்சி மன்ற தலைவரிடம் சென்று கேட்டதாகவும், அதற்கு அவர் முறையாக பதில் அளிக்காததுடன், தனது தாயின் பணத்தையும் திருப்பி தரமறுத்து விட்டதாகவும் மணிகண்டன் கூறினார்.
இந்த முறைகேடு தொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலர், மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளுக்கு மணிகண்டன் புகார் மனு அளித்திருந்தார். மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இது தொடர்பாக நடைபெற்ற விசாரணை குறித்து விசாரணை அதிகாரியும் வட்டாரவளர்ச்சி அலுவலருமான அறிவழகன் கூறுகையில், இந்த புகாரில் உண்மை உள்ளது என்றும், மணிகண்டன் பெயரில் வீடு கட்டியதாக, வேறொரு வீட்டை காட்டி பணம் விடுவித்து மோசடி நடந்ததும் கண்டறியப்பட்டுள்ளது என்றார்.
விசாரணை குறித்த அறிக்கை மாவட்ட கலெக்டரிடம் அளிக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறு பிரதம மந்திரியின் வீடுகட்டும் திட்டத்தில் வீடுகட்டாமலேயே கட்டியதாக கூறி முறைகேடு நடைபெற்றது உண்மை என தெரியவந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.பெரம்பலூர் மாவட்டத்தில் இந்த திட்டத்தில் வீடு ஒதுக்கிய விபரங்கள், அதன் உண்மை தன்மை ஆகியவற்றை தணிக்கை செய்தால் மேலும் பல முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.