ஆலங்குளத்தில் டெங்கு காய்ச்சலுக்கு பலியான சிறுவனின் அண்ணனுக்கு தீவிர சிகிச்சை
- சுகாதாரத்துறையும், பேரூராட்சியும் டெங்கு பரவலை அதிகரிப்பதை கட்டுப்படுத்த போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
- நோயாளிகளுக்கு ஏற்றப்படும் குளுக்கோஸ் பாட்டில்களை இரும்பு ஆங்கிள்களில் தொங்கவிடாமல் அருகில் இருக்கும் ஜன்னல் கம்பிகளில் பிளாஸ்டிக் கவர்கள் மூலம் கட்டி தொங்கவிட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
ஆலங்குளம்:
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் உள்ள தாலுகா அரசு மருத்துவமனையை ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.
இங்கு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க போதிய மருத்துவர்கள் மற்றும் அடிப்படை வசதிகள் இல்லை எனக்கூறி பலமுறை நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் புகார் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது ஆலங்குளம் பகுதியில் டெங்கு காய்ச்சல் அதிகரித்துள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனால் அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகள் நிரம்பி வழிகிறது. ஆனால் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை சற்று திணறி தான் வருகிறது. அதற்கு போதிய டெங்கு ஒழிப்பு பணியாளர் இல்லாததே காரணம் என கூறப்படுகிறது.
ஆலங்குளத்தில் சுமார் 40 ஆயிரம் மக்கள் தொகை உள்ளது. ஆனால் டெங்கு ஒழிப்பு மஸ்தூர் பணியாளர்கள் வெறும் 10 பேர் மட்டுமே உள்ளனர். டெங்கு மஸ்தூர் பணியாளர் பேரூராட்சியால் பணியமர்த்தப்படுவார்கள்.
இந்த 10 பேரில் சிலரை வரி வசூல் செய்யவும், வீடுகளை அளவீடு செய்யும் பணிக்கு அனுப்பி விடுவதாக கூறப்படுகிறது.
சாதாரணமாக 80 மஸ்தூர் பணியாளர்கள் பணியமர்த்த வேண்டிய இடத்தில் வெறும் 10 டெங்கு ஒழிப்பு பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
சுகாதாரத்துறையும், பேரூராட்சியும் டெங்கு பரவலை அதிகரிப்பதை கட்டுப்படுத்த போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
நோயாளிகளுக்கு ஏற்றப்படும் குளுக்கோஸ் பாட்டில்களை இரும்பு ஆங்கிள்களில் தொங்கவிடாமல் அருகில் இருக்கும் ஜன்னல் கம்பிகளில் பிளாஸ்டிக் கவர்கள் மூலம் கட்டி தொங்கவிட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இச்சம்பவம் அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் சிறுவன் டெங்கு காய்ச்சலால் இறந்தது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆலங்குளம் ராஜிவ் நகரை சேர்ந்தவர் தங்கம், சங்கீதா தம்பதியினர். தங்கம் கூலி தொழிலாளி. இவர்களுக்கு பர்வீஷ் (வயது11), பூனிஷ் (9) என 2 மகன்கள்.
2 பேரும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஆலங்குளம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். காய்ச்சல் தொடரவே 2 பேரும் கடந்த 24-ந் தேதி ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.
ரத்ததில் அணுக்கள் குறைந்து டெங்கு காய்ச்சல் என கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்படாததால் தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சகோதரர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
பூனிஷ்க்கு டெங்கு காய்சல் தாக்கம் அதிகரித்து மூளை காய்ச்சலாக மாறியதால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவன் நேற்றிரவு பலியானான்.
பர்வீஷ்க்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவனது உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்து வருவதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அப்பகுதி பொதுமக்கள் கூறும்போது, உயிரிழப்பு ஏற்படும் முன்பு போதிய டெங்கு ஒழிப்பு பணியாளர் நியமித்து டெங்கு ஒழிப்பு பணியை துரிதப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.