நீலகிரியில் கொட்டி தீர்க்கும் கனமழை: மரங்கள் முறிந்து பல கிராமங்களில் மின் வினியோகம் பாதிப்பு
- நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை தொடா்ந்து வலுத்து வருகிறது.
- மஞ்சூர் சுற்றுப்புற பகுதிகளிலும் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை தொடா்ந்து வலுத்து வருகிறது. குறிப்பாக கூடலூர், அப்பர் கூடலூர், தேவாலா, குந்தா உள்ளிட்ட பகுதிகளில் மிக கனமழை பெய்து வருகிறது.
ஊட்டி நகரில் பெய்து வரும் கனமழையால் நகரின் மையப்பகுதியான கோவை செல்லும் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதேபோல் கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலையில் ராட்சத மரம் முறிந்து விழுந்தது. அந்த சமயம் அவ்வழியாக வாகன ஓட்டிகள் வராததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
ஊட்டி மத்திய பஸ் நிலைய சாலை, படகு இல்ல சாலை, தீட்டுக்கல் சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகளிலும் 10-க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் மாற்று சாலைகள் வழியாக திருப்பி விடப்பட்டன.
மஞ்சூர் சுற்றுப்புற பகுதிகளிலும் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. இந்த மழைக்கு மெரிட்ட ராணி என்பவரின் வீட்டு சுவர் திடீரென இடிந்து விழுந்தது.சத்தம் கேட்டு வெளியில் ஓடி வந்ததால் 10 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை உள்பட 3 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பின்னர் அவர்கள் அருகே உள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டனர்.
எடக்காட்டில் இருந்து அவலாஞ்சி நோக்கி மின்வாரியத்திற்கு சொந்தமான ஆம்புலன்ஸ் சென்றது. மழையால் அவலாஞ்சி சாலையில் மண்சரிவு ஏற்பட்டிருந்தது. இதில் ஆம்புலன்ஸ் சிக்கி கொண்டது. தகவல் அறிந்த மின் வாரிய ஊழியர் விரைந்து வந்து நீண்ட நேரம் போராடி மண்குவியலை அகற்றி ஆம்புலன்சை எடுத்து சென்றனர்.
கூடலூர், பந்தலூர் தாலுகாக்களிலும் கனமழை பெய்தது. தொடர் மழையால் பொன்னானி, மங்குழி, காலம்புழா உள்பட அனைத்து ஆறுகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. தரைப்பாலங்களும் நீரில் மூழ்கின. இதனால் பல கிராமங்களுக்கு செல்லக்கூடிய சாலைகள் துண்டிக்கப்பட்டது.
கூடலூா் முதல் மைல் ஆற்றில் மூங்கில் புதா்கள் சாய்ந்துள்ளதால் ஆற்றுவெள்ளம் தடைபட்டு தண்ணீா் குடியிருப்புகளை சூழும் அபாயம் உள்ளது. ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மூங்கில் புதா்களை அகற்றும் பணி நடைபெறவில்லை.
மஞ்சூர்-தங்காடு சாலையில் பிகுளிபாலம் அருகே ராட்சத மரம் ரோட்டின் குறுக்கே விழுந்தது. இதனால் மஞ்சூர் தங்காடு ஊட்டி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்து விரைந்து சென்ற நெடுஞ்சாலைதுறையினர் மரத்தை வெட்டி அகற்றி சீரமைத்தனர். இதை தொடர்ந்து மீண்டும் போக்குவரத்து துவங்கியது.
மஞ்சூர் எடக்காடு கவுண்டம்பாளையம் பகுதியில் பெரிய அளவில் மண்சரிவு ஏற்பட்டது. இதில் தடுப்பு சுவர் இடிந்து சாலையை மூடியது. இதனால் அந்த கிராமத்திற்கு செல்லும் சாலை துண்டிக்கப்பட்டது.பெங்கால்மட்டம் கோத்திபென் அருகே மண்சரிவு ஏற்பட்டது. சுமார் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவுகள் ஏற்பட்டதை தொடர்ந்து நெடுஞ்சாலைதுறையினர் விரைந்து சென்று ஜேசிபி இயந்திரத்தின் உதவியோடு மணி சரிவுகளை அகற்றினார்கள்.
பெங்கால்மட்டம் கோத்திபென் அருகே மண்சரிவு ஏற்பட்டது. சுமார் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவுகள் ஏற்பட்டதை தொடர்ந்து நெடுஞ்சாலைதுறையினர் விரைந்து சென்று ஜேசிபி இயந்திரத்தின் உதவியோடு மணி சரிவுகளை அகற்றினார்கள்.
மழைக்கு நேற்று ஒரே நாளில் 7-க்கும் மேற்பட்ட வீடுகளும் மரம் விழுந்தும், இடிந்து விழுந்தும் சேதம் அடைந்தது.
பல இடங்களில் மரங்கள் முறிந்து மின் கம்பிகள் மீது விழுந்ததால் ஏராளமான கிராமங்களில் மின் தடையும் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதிகள் இருளாக காட்சியளித்தன. மின்சாரம் இல்லாததால் மக்களும் சிரமம் அடைந்தனர்.
மஞ்சூரில் சூறாவளி காற்றில் கம்பிகள் ஒன்றுடன் ஒன்று உராய்ந்ததில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
மாவட்டத்தில் இன்று கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 32 செ.மீ மழை பதிவாகி உள்ளது. தொடர் மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள அனைகளும் நிரம்பியுள்ளன.
தொடா் மழையின் காரணமாக தொடா்ந்து 3-வது நாளாக ஊட்டி, குந்தா, கூடலூா், பந்தலூா் தாலுகாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.