தமிழ்நாடு செய்திகள்

நீலகிரியில் கனமழை: 20-க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு

Published On 2022-07-16 11:09 IST   |   Update On 2022-07-16 11:09:00 IST
  • தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால் கடந்த ஒரு வார காலமாக கனமழை பெய்து வருகிறது.
  • அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது.

ஊட்டி:

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால் கடந்த ஒரு வார காலமாக கனமழை பெய்து வருகிறது.

நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக அப்பர் பவானி, அவலாஞ்சி, எமரால்டு உள்ளிட்ட அணை பகுதிகளில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது.

மஞ்சூர் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மழை தீவிரம் அடைந்துள்ளதுடன், காற்றின் வேகமும் அதிகரித்ததால் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டும், மரங்களும் முறிந்து விழுவதும் தொடர்கிறது.

நேற்று காலை தொட்டகம்பை கட்லாடா பாலம் அருகே மண்சரிவு ஏற்பட்டது. இதில் சாலையின் மேற்புற பகுதியில் இருந்து மண்குவியலுடன் ராட்சத பாறைகள் உருண்டு நடுரோட்டில் விழுந்தன.

இதனால் மஞ்சூரில் இருந்து பிக்கட்டி வழியாக எமரால்டு, இத்தலார் ஊட்டி போன்ற பகுதிகளுக்கான போக்குவரத்து 5 மணி நேரம் ரத்து செய்யப்பட்டது. பல்வேறு இடங்களில் இருந்து வந்த வாகனங்கள் சாலையின் இருபுறமும் அணிவகுத்து நின்றன.

இத்தலார் முதல் எமரால்டு வரையும் மற்றும் கிண்ணக்கொரை சாலையில் தாய்சோலா பகுதி உள்பட 20க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. 15க்கும் மேற்பட்ட மரங்களும் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை கோட்டபொறியாளர் குழந்தை ராஜ் மேற்பார்வையில் 50க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஜே.சி.பி.எந்திரங்களின் உதவியுடன் சாலைகளில் விழுந்த மண்சரிவுகள் மற்றும் பாறைகளை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர்.

மஞ்சூர் அருகே அண்ணாநகர் பகுதியை சேர்ந்த புஷ்பா என்பவரின் வீடும் இடிந்தது. இதைதொடர்ந்து குந்தா தாசில்தார் இந்திரா தலைமையிலான அதிகாரிகள் இடிந்த வீட்டை பார்வையிட்டு அவருக்கு நிவாரண தொகைகளை வழங்கினர்.

குந்தா அணைக்கு 2-வது நாளாக நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டதால் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதேபோல் ஊட்டி-கெந்தரை சாலை, சின்கோனா, தாவரவியல் பூங்கா உள்பட பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன.

தொடர்மழையால் கூடலூரில் இருந்து தோட்டமூலா செல்லும் சாலையில் உள்ள பாலம் உடைந்து விழுந்தது. இதனால் சாலை துண்டிக்கப்பட்டு உள்ளது. கூடலூர் தொரப்பள்ளி அருகே இருவயல் ஆதிவாசி கிராமத்துக்குள் வெள்ளம் புகும் அபாயம் உள்ளது.

இதனால் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக 5 குடும்பத்தை சேர்ந்த 25 பேரை தாசில்தார் சித்தராஜ் தலைமையிலான வருவாய்த்துறையினர் அவர்களை மீட்டு உண்டு உறைவிட பள்ளியில் தங்க வைத்தனர்.

கூடலூரில் இருந்து ஆரோட்டு பாறைக்கு செல்லும் சாலையல் மூங்கில்கள் சரிந்து விழுந்தது. இதனால் அங்கு 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.தேவலா அட்டியில் வாய்க்காலில் தண்ணீர் வரத்து அதிகரித்து பாலம் உடைந்தது. பந்தலுர் அருகே செம்மன்வயல் ஆதிவாசி கிராமத்தில் வெள்ளம் புகுந்தது.

Tags:    

Similar News