தமிழ்நாடு

சட்டங்கள் உருவாக்குவதில் பெண்களின் பங்கு அதிகரித்துள்ளது- கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு

Published On 2024-03-08 05:53 GMT   |   Update On 2024-03-08 05:53 GMT
  • நிதி ஆதாரங்களை பொறுத்தவரையில் 50 கோடி அளவிற்கு ஏற்படுத்தப்பட்டுள்ள வங்கி கணக்குகளில் பெண்களும் அதிகமாக உள்ளனர்.
  • 2047-ம் ஆண்டுக்குள் நமது தேசம் தன்னிறைவு பெற்றுள்ள நாடாக திகழ வேண்டும் என்பது நமது நோக்கம்.

சென்னை:

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் உள்ள அவ்வையார் சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டு உள்ள திருவுருவப்படத்திற்கு கவர்னர் ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அதை தொடர்ந்து கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது:-

அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த வளர்ச்சியை மீண்டும் உறுதி செய்ய வேண்டும்.

பிரதமர் நரேந்திர மோடி பொறுப்பேற்ற பிறகு பெண்களுக்கான பல்வேறு அடிப்படை மாற்றங்களை கொண்டு வந்துள்ளார்.

குறிப்பாக மகளிர் மேம்பாட்டு திட்டங்கள், பெண்களை முன்னிறுத்தும் வளர்ச்சிகள், பெண்கள் நிர்வாகம் ஆகியவற்றில் முயற்சிகளை மேற்கொண்டு உள்ளார்.

பல பகுதிகளில் பெண்களுக்கு பாதுகாப்பான கழிப்பறை கட்டுவது, பள்ளி, கல்லூரி நிறுவனங்களில் கழிப்பறைகள் வசதிகள் செய்து கொடுப்பது ஆகிய திட்டங்களால் மாணவிகள் அதிகம் சேர்ந்துள்ளனர்.

குறிப்பிடத்தக்க அளவிற்கு மாணவிகளின் சேர்க்கை உயர்ந்துள்ளது. பல இடங்களில் மாணவர்களைவிட மாணவிகள்தான் ஆராய்ச்சி படிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

பெண்களின் சுகாதாரத்திற்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. தற்போது தாய்மார்கள் பிறந்த குழந்தைகள் உட்பட அனைவரும் நலமாக உள்ளனர்.

அதேபோல், நிதி ஆதாரங்களை பொறுத்தவரையில் 50 கோடி அளவிற்கு ஏற்படுத்தப்பட்டுள்ள வங்கி கணக்குகளில் பெண்களும் அதிகமாக உள்ளனர்.

முத்ரா கடன் எடுத்து தொழில் தொடங்கிய பெண்கள் 40 கோடி பேர் உள்ளனர். அவர்கள் 23 லட்சம் கோடி கடனாக பெற்று உள்ளனர்.

பெண்கள் தங்கள் வாழ்நாளில் ஒவ்வொரு அம்சங்களிலும் ஆண்களுக்கு சமமாக பங்களித்து வருகிறார்கள். பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் பெண்களின் பங்களிப்பு அதிகமாக உள்ளதால், சட்டங்களை உருவாக்குவதிலும் பெண்களின் பங்கு அதிகரித்துள்ளது.

2047-ம் ஆண்டுக்குள் நமது தேசம் தன்னிறைவு பெற்றுள்ள நாடாக திகழ வேண்டும் என்பது நமது நோக்கம். இந்த தேசிய கனவு பெண்களின் சரி பாதி பங்களிப்புடன் நிறைவேற்றப்படும்.

அனைவரையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த வளர்ச்சியை மீண்டும் உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்து 'பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்' பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News