தமிழ்நாடு

மாமல்லபுரத்தில் பட்டம் விடும் திருவிழா இன்றுடன் நிறைவு

Update: 2022-08-15 07:15 GMT
  • பட்டம் விடும் திருவிழா இன்று 3-வது நாளுடன் நிறைவு பெறுகிறது.
  • பட்டம் விடும் கலைஞர்கள் 100-க்கும் மேற்பட்ட பட்டங்களை பறக்க விட்டனர்.

மாமல்லபுரம்:

மாமல்லபுரம் அடுத்த தேவநேரி கிழக்கு கடற்கரை சாலையில் சர்வதேச பட்டம் விடும் திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது.

இதில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்த பட்டம் விடும் கலைஞர்கள் 100-க்கும் மேற்பட்ட பட்டங்களை பறக்க விட்டனர்.

முதல் நாளில் 8ஆயிரத்திற்கும் மேற்பட்டோரும். நேற்று 10 ஆயிரத்திற்கும் அதிகமானோரும் பட்டம் விடும் விழாவை பார்த்து ரசித்தனர்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான வாகனங்களால் கிழக்கு கடற்கரை சாலையில் தேவநேரி, பூஞ்சேரி என இருபுறமும் 3 கி.மீ, தூரத்திற்கு கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது. ராட்சத பல்லி, பொம்மை, ஓசை எழுப்பும் ராட்சத பட்டங்கள் என வித்தியாசமான பட்டங்கள் அனைவரையும் கவர்ந்தது.

பட்டம் விடும் திருவிழா இன்று 3-வது நாளுடன் நிறைவு பெறுகிறது. இன்று விடுமுறையும் புராதன சின்னங்களை இலவசமாக பார்ப்பதற்கும், கடைசி நாள் என்பதால் ஏராளமானோர் பட்டம் விடும் திருவிழாவை ரசிக்க மாமல்லபுரம் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று இரவு பேஷன்ஷோ, கலை நிகழ்ச்சியுடன் இரவு 9மணிக்கு பட்டம் விடும் விழா நிறைவு பெறுகிறது.

டி.எஸ்.பி ஜெகதீஸ்வரன் உத்தரவின் பெயரில் இன்ஸ்பெக்டர் ருக்மாந்தகன் தலைமையில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் கலந்து கொண்ட உள்நாட்டு, வெளிநாட்டு பட்டம் விடும் கலைஞர்களுக்கு சுற்றுலாத்துறை சார்பில் சான்றிதழ் வழங்கப்படுகிறது. அனைவரையும் கவர்ந்த பட்டம் எது? என்று தேர்வு செய்து அந்த குழுவினருக்கு சிறப்பு பரிசும் வழங்கப்பட உள்ளது.

Similar News