அயன்பாப்பாகுடி கால்வாயில் கழிவுநீர் கலந்து வெளியேறும் நுரை- விவசாயிகள் அச்சம்
- தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது.
- கழிவுநீர் சாலையின் ஒருபுறம் ஓடுவதால் வாகன ஓட்டிகள் மறுபுறத்தில் செல்கின்றனர்.
அவனியாபுரம்:
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மதுரை மாவட்டத்திலும் நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது.
அவனியாபுரம் அயன்பாப்பாகுடி, வெள்ளக்கல் கண்மாய்கள் நிறைந்து மறுகால் பாய்கின்றன.
2 நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் வெள்ளக்கல் குப்பை கிடங்கில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அயன்பாப்பாக்குடி கண்மாயில் மழை நீரோடு கலந்து செல்கிறது. பாசன கால்வாயில் திறக்கப்படும் தண்ணீரில் இருந்து பஞ்சு போன்ற வெண்மை நிறத்தில் நுரை நுரையாக தண்ணீர் வருவதால் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.
மேலும் இந்த நுரை மலை போல் பெருகி காற்றில் பறந்து அருகில் உள்ள விமான நிலைய சாலையில் பறப்பதால் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்துகிறது.
இது தவிர கழிவுநீர் சாலையின் ஒருபுறம் ஓடுவதால் வாகன ஓட்டிகள் மறுபுறத்தில் செல்கின்றனர்.
இதனால் விபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.