தமிழ்நாடு

அரசு பள்ளியில் சிமெண்ட் சிலாப் இடிந்து விழுந்ததால் பரபரப்பு- பெற்றோர் ஆர்ப்பாட்டம்

Published On 2022-07-04 08:51 GMT   |   Update On 2022-07-04 08:51 GMT
  • ஈரோடு வீரப்பன்சத்திரம், குட்டைமேடு வீதியில் மாசிமலை ரங்கசாமி கவுண்டர் அரசு பெண்கள் நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
  • பள்ளியின் கட்டிடங்கள் பழுதடைந்து காணப்படுவதாகவும், போதிய கழிப்பறை வசதி இல்லையென்றும் மாணவிகள், பெற்றோர்கள் புகார் தெரிவித்திருந்தனர்.

ஈரோடு:

ஈரோடு வீரப்பன்சத்திரம், குட்டைமேடு வீதியில் மாசிமலை ரங்கசாமி கவுண்டர் அரசு பெண்கள் நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை 400-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்தப் பள்ளியின் கட்டிடங்கள் பழுதடைந்து காணப்படுவதாகவும், போதிய கழிப்பறை வசதி இல்லையென்றும் மாணவிகள், பெற்றோர்கள் புகார் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று விடுமுறை நாளில் பள்ளி கட்டிடத்தின் ஒரு பகுதியில் சிமெண்ட் சிலாப் இடிந்து விழுந்துள்ளது. நேற்று விடுமுறை நாள் என்பதால் இந்த சம்பவம் யாருக்கும் தெரியவில்லை.

இன்று வழக்கம் போல் பள்ளிகள் செயல்பட தொடங்கியது. மாணவிகள் பள்ளிக்கு வர தொடங்கினர். அப்போது பள்ளி கட்டிடத்தின் ஒரு பகுதியில் உள்ள சிமெண்ட் சிலாப் இடிந்து கீழே விழுந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

நல்ல வேலையாக மாணவிகள் யாரும் அந்த சமயம் பள்ளிக்கு வரவில்லை. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. எனினும் இந்த தகவல் குறித்து அறிந்ததும் 15-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் பள்ளி வளாகத்திற்கு வந்தனர். அவர்கள் திடீரென பள்ளி வளாகத்துக்குள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இங்குள்ள பள்ளி கட்டிடங்கள் பழுதடைந்து காணப்படுகிறது. எப்போது எந்த கட்டிடம் இடிந்து விழுமோ என்ற அச்சமான சூழ்நிலை நிலவி வருகிறது. நேற்று கூட கட்டிடத்தின் சிமெண்ட் சிலாப் இடிந்து கீழே விழுந்துள்ளது. நல்ல வேளையாக அந்த சமயத்தில் மாணவிகள் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மேலும் இங்குள்ள மாணவிகளுக்கு போதிய கழிப்பறை வசதி இல்லை. இதனால் அவர்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது.

எனவே உடனடியாக பழுதடைந்த கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும். மாணவிகளுக்கு போதிய கழிப்பறை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இது குறித்து தகவல் கிடைத்ததும் ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பெற்றோரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

Tags:    

Similar News