தமிழ்நாடு

காம்பவுண்டு சுவர் ஏறி குதித்து செல்லும் மின்வாரிய ஊழியர்.


தக்கலை அருகே வீட்டில் ஆய்வுக்கு சென்ற மின் வாரிய ஊழியரை சிறைப்பிடித்த பெண்

Published On 2023-03-11 08:12 GMT   |   Update On 2023-03-11 11:02 GMT
  • அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக புகார் செய்வேன் என்றும் எச்சரித்தார்.
  • வீட்டில் இருந்த பெண் ஆய்வு பணிக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும் அங்கு சென்ற ஊழியர் தெரிவித்துள்ளார்.

தக்கலை:

தக்கலை அருகே முளகுமூடு பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி ஒருவரின் வீட்டுக்கு நேற்று டிப்-டாப் உடையணிந்த வாலிபர் ஒருவர் சென்றார்.

வீட்டில் அவரது மனைவி மட்டுமே இருந்தார். அவர் அந்த வாலிபரிடம் யார் நீங்கள்? எதற்காக வந்துள்ளீர்கள் என்று கேட்டார். அதற்கு அந்த நபர் மின் வாரிய ஊழியர் என்றும் வீட்டின் மின் மீட்டரை சோதனையிட வந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

அவரிடம் தொழிலாளியின் மனைவி அடையாள அட்டையை காட்டுமாறு கேட்டார். ஆனால் அவரோ முறையாக அடையாள அட்டையை காண்பிக்காததால் சந்தேகமடைந்த தொழிலாளியின் மனைவி வாக்குவாதம் செய்தார்.

மேலும் இதுகுறித்து அவர் தனது கணவருக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்துள்ளார். அதோடு வீட்டுக்கு வந்த வாலிபர் வெளியே தப்பி செல்லாதவாறு வீட்டின் கேட்டையும் பூட்டி அந்த வாலிபரை சிறைபிடித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த வாலிபர் அங்கிருந்தபடியே சிலருக்கு போன் செய்து அவர்களை சம்பவ இடத்திற்கு வருமாறு அழைத்தார்.

மேலும் தொழிலாளியின் மனைவியையும் மிரட்டினார். அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக புகார் செய்வேன் என்றும் எச்சரித்தார். ஆனால் வாலிபரின் மிரட்டலுக்கு பயப்படாத பெண் தன் கணவர் வந்த பின்பு இதுபற்றி பேசி கொள்ளலாம் என்று கூறிவிட்டார்.

இந்த நிலையில் அந்த வாலிபரின் அழைப்பின் பேரில் சிலர் அங்கு வந்தனர். அவர்கள் தொழிலாளியின் மனைவியிடம் வாக்குவாதம் செய்தனர். மேலும் வீட்டுக்குள் சிறைபிடிக்கப்பட்ட நபரை மீட்டு செல்லவும் முயன்றனர். ஆனால் அந்த பெண், சிறைபிடித்த நபரை வெளியே விடமாட்டேன் என்று கூறியபடி கேட்டை இழுத்து மூடி விட்டார்.

இதனால் அரண்டு போன நபர், வீட்டின் காம்பவுண்டு சுவர் ஏறி குதித்து தப்பி ஓடினார். இதனால் அங்கு பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது.

இதற்கிடையே பெண்ணின் கணவர் அங்கு வந்தார். அவர் வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமிரா காட்சிகளை கைப்பற்றி அதில் இருந்த பதிவுகளை பார்வையிட்டார்.

மேலும் அந்த காட்சியில் இருந்த நபர் குறித்து மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று விசாரித்தார். இதில் தொழிலாளியின் வீட்டுக்கு வந்தது மின் வாரிய ஊழியர்தான் என்பது தெரிந்தது. மின் வாரிய ஊழியர் என்றால், அவர் அடையாள அட்டையை காட்டாமல் வாக்குவாதம் செய்தது ஏன்? என்பது சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இது குறித்து இரவிபுதூர்கடை மின் வாரிய அலுவலக இளநிலை பொறியாளரை தொடர்பு கொண்டு கேட்ட போது, அந்த வீட்டில் காடை கோழிகள் வளர்ப்பதாகவும் அதற்காக தனி மின் இணைப்பு பெற்றுள்ளார்களா? என ஆய்வு செய்ய சென்றதாகவும் தெரிவித்தார். ஆனால் வீட்டில் இருந்த பெண் ஆய்வு பணிக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும் அங்கு சென்ற ஊழியர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக விசாரணை நடத்தி மின் வாரிய ஊழியர் மீது தவறு இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். தற்போது இந்த சம்பவம் குறித்த சி.சி.டி.வி. காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News