இந்த அரசாங்கம் எப்போது வீட்டுக்கு செல்லும் என்று மக்கள் ஏக்கத்தில் உள்ளனர்- எடப்பாடி பழனிசாமி பேச்சு
- எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இருந்த காலத்தில் அ.தி.மு.க.வை கருணாநிதியால் உடைக்க முடியவில்லை.
- தி.மு.க. எதிர்கட்சி அந்தஸ்தை கூட பெற முடியாது.
வேலூர்:
அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட பின்னர் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு நேற்று முதல் முறையாக வருகை தந்தார்.
சேலத்தில் இருந்து சென்னை செல்லும் வழியில் நாட்டறம்பள்ளி, வேலூர், வாலாஜா டோல்கேட்டில் அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அ.தி.மு.க.வை எப்பாடு பட்டதாவது உடைக்க வேண்டும் என்று கங்கனம் கட்டி கொண்டிருக்கிறார். அவருடைய தந்தை கருணாநிதி பலமுறை உடைக்க முயற்சி செய்தார்.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இருந்த காலத்தில் அ.தி.மு.க.வை கருணாநிதியால் உடைக்க முடியவில்லை. அவராலேயே முடியவில்லை.
இந்த ஸ்டாலினால் அ.தி.மு.க.வை உடைக்க முடியுமா? இங்கிருக்கும் தொண்டர் பட்டாளங்களால் நிறைந்தது அ.தி.மு.க. மு.க.ஸ்டாலின் அவர்களே சில துரோகிகளோடு சேர்ந்து கொண்டு இந்த இயக்கத்தை முடக்கலாம் என்று எண்ணி விடாதீர்கள். அப்படி எண்ணினால் எதிர்காலத்தில் தி.மு.க. எதிர்கட்சி அந்தஸ்தை கூட பெற முடியாது.
தி.மு.க.வினர் ஆட்சி, அதிகாரத்தில் இருந்து கொண்டு அ.தி.மு.க. நிர்வாகிகளையும், தொண்டர்களையும் மிரட்டி பார்க்கிறீர்கள். சோதனைகளை படிகட்டுகளாக்கி சாதனை படைத்த கட்சி அ.தி.மு.க. என்று வரலாறு கூறுகிறது. அரிதாக மு.க.ஸ்டாலினுக்கு முதல்-அமைச்சர் பதவி கிடைத்துள்ளது.
அதனை வைத்து மக்களுக்கு நல்லது செய்ய பாருங்கள்.
எப்போதும் தி.மு.க. மக்களுக்கு நல்லது செய்ததாக வரலாறு கிடையாது. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஒரு பேச்சு. ஆட்சிக்கு வந்த பின்னர் ஒரு பேச்சு. அப்படியே அந்தர் பல்டி அடித்து விடுவார்கள்.
தி.மு.க. ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக மக்களுக்கு பல்வேறு வாக்குறுதி கொடுத்தார்கள். ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து என்றார்கள். ஆனால் என்னாச்சு?. அது ஏமாற்று வேலை.
ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்து இல்ல தரசிகளுக்கும் மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை கொடுப்போம் என்றார்கள். ஆனால் இதுவரை கொடுக்கவில்லை. 100 நாள் வேலை திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும். அவர்களின் ஊதியம் அதிகரிக்கப்படும்.
கல்விக்கடன் ரத்து செய்யப்படும். சமையல் கியாஸ் சிலிண்டருக்கு ரூ.100 மானியம் கொடுக்கப்படும் என்றார்கள். ஆனால் எதுவும் செயல்படுத்தப்படவில்லை. பொங்கல் பரிசில் வழங்கப்பட்ட பொருட்களை யாரும் பயன்படுத்தமுடியாத நிலை காணப்பட்டது. பொங்கல் பரிசு என்ற பெயரில் ரூ.500 கோடி ஊழல் செய்தது தான் மிச்சம்.
அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மீது பொய் வழக்கு போட்டு அ.தி. மு.க.வினரை முடக்க முடியாது. எத்தனை பொய் வழக்கு போட்டாலும் அத்தனையும் தவிடு பொடியாக்கி அ.தி.மு.க.மீண்டும் ஆட்சிக்கு வரும். அ.தி.மு.க.வை உடைக்க வேண்டும், சிதறடிக்க வேண்டும் என்று தி.மு.க. திட்டமிட்டு சதி செய்து கொண்டிருக்கிறது.
அதனை முறியடிக்கும் சக்தி அ.தி.மு.க.தொண்டர்களுக்கு உண்டு. யாரையும் அடக்கி ஆள முடியாது. அடக்கி ஆள நினைத்தால் இலங்கை நிலை தான் இங்கும் வரும்.
நாடாளுமன்ற தேர்தலோடு சட்டசபைக்கும் தேர்தல் வரும்.
மக்கள் புரட்சி வெடித்தால் யாராலும் கட்டுப்படுத்த முடியாது. 14 மாத தி.மு.க. ஆட்சியில் அனைத்து துறைகளிலும் சுமார் ரூ.20 ஆயிரம் கோடி ஊழல் செய்துள்ளனர். ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி தி.மு.க.. அதே நிலைமை வந்தாலும் வந்து விடும்.
2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலோடு சட்டசபைக்கும் தேர்தல் வந்தாலும் வரும். இந்த அரசாங்கம் எப்போது வீட்டுக்கு செல்லும் என்று ஒவ்வொரு நாளும் மக்கள் ஏக்கத்தில் உள்ளனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
ராணிப்பேட்டை, வாலாஜா டோல்கேட்டில் அவர் பேசியதாவது:-
இந்த 14 மாதங்களில் விலைவாசி உயர்ந்து விட்டது. மின் கட்டணத்தை உயர்த்தி இருக்கிறார்கள். வீட்டு வரியையும் உயர்த்தி விட்டார்கள். ஆட்சிக்கு வந்தால் நிறைய திட்டங்களை நிறைவேற்று வோம் என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார்.
14 மாதத்தில் முதியோர்கள் வாங்கிய பென்ஷன் திட்டத்தை நிறுத்தியது தான் சாதனை. மேலும் எங்கு பார்த்தாலும் போதை பொருள். இளைஞர்கள், மாணவர்கள் இன்றைக்கு போதைக்கு அடிமையாக்கிக் கொள்ளும் சூழ்நிலை ஏற்பட் டுவிட்டது.
ஆன்லைன் சூதாட்டத்திற்கு மக்களிடத்தில் கருத்து கேட்கப்போவதாக அறிவித்துள்ளார்கள். யாராவது சூதாட்டத்திற்கு கருத்து கேட்பார்களா?
எதிர்காலத்தில் ஒரு நல்லாட்சி மலர, ஏழை எளிய ஒடுக்கப்பட்ட மக்களின் எண்ணங்களை பூர்த்தி செய்ய, அனைத்து திட்டங்களும் நிறைவேற மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி மலர உங்களுடைய ஒத்துழைப்பு தேவை.
இவ்வாறு அவர் பேசினார்.