அனைவரையும் ஒரு தாய் மக்களாக கருதி தி.மு.க. அரசு இயங்கி வருகிறது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
- நாங்கள் கூட்டணி வைக்கிறபோது நாட்டிற்கு பல நன்மைகளை செய்வதற்கு அது பயன்படுகிறது.
- இனிகோ செய்யும் கூட்டணி இந்த சமுதாயத்துக்கு பயன்படுகிறது.
சென்னை:
கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் சார்பில் சென்னை லயோலா கல்லூரி வளாகத்தில் கிறிஸ்துமஸ் பெரு விழா நேற்று கொண்டாடப்பட்டது. அன்பின் கிறிஸ்துமஸ் விழா என்று பெயரிடப்பட்ட இந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு கிறிஸ்துபிறப்பு பிரமாண்ட குடிலை திறந்து வைத்தார். அவரை கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத்தின் தலைவர் இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ. வரவேற்றார்.
விழாவில் கிறிஸ்துமஸ் பெருவிழாவையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கிறிஸ்துமஸ் கேக்கை வெட்டி மேடையில் இருந்த கிறிஸ்தவ பேராயர் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்களுக்கு ஊட்டி மகிழ்ந்தார்.
கிறிஸ்துமஸ் விழாவை இனிகோ இருதயராஜ் தொடர்ந்து 13 ஆண்டு காலமாக நடத்தி கொண்டிருக்கிறார்.
நாங்கள் எல்லாம் தேர்தல் நேரத்தில்தான் கூட்டணி அமைப்போம். 5 வருடத்திற்கு ஒருமுறை அந்த கூட்டணி அமைக்கப்படும். ஆனால் இவர் ஆண்டு முழுவதும் ஒவ்வொரு வருடமும் கூட்டணி அமைத்து கொண்டிருக்கிறார். என்னையும் தவறாமல் அழைத்து வருகிறார்.
நாங்கள் கூட்டணி வைக்கிறபோது நாட்டிற்கு பல நன்மைகளை செய்வதற்கு அது பயன்படுகிறது.
ஆனால் இனிகோ செய்யும் கூட்டணி இந்த சமுதாயத்துக்கு பயன்படுகிறது.
இது மதத்தின் விழாவாக இல்லாமல் ஒருமத நம்பிக்கையாளர்கள் பங்கேற்க கூடிய விழாவாக இல்லாமல் அனைத்து மதத்தவரும் பங்கேற்க கூடிய வகையில் இந்த விழா நடக்கிறது.
இங்கே பேசியவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வைத்தனர். சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க மத்திய அரசு முன்வராவிட்டால் மாநில அரசு பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கும்.
மக்களிடையே வேறுபாடு பார்க்காமல் அனைவரையும் ஒருதாய் மக்களாக கருதும் அன்பு உள்ளம் கொண்டதாக அரசுகள் இயங்க வேண்டும். திராவிட முன்னேற்றகழக அரசு அப்படித்தான் இயங்கி வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வெள்ளியால் செய்யப்பட்ட கருணாநிதியின் பேனா நினைவு சின்னத்தை இனிகோ இருதயராஜ் வழங்கினார். மு.க.ஸ்டாலின் ஒன்றரை ஆண்டில் செய்த சாதனைகளை தொகுத்து இனிகோ இருதயராஜ் வெளியிட்ட காணொலி காட்சி அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. இதை தமிழ்நாடு முழுவதும்எடுத்து சென்று மக்களிடத்தில் போட்டு காட்ட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டார். நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார்.