தமிழ்நாடு செய்திகள்

தமிழக அரசு ஆஸ்பத்திரிகளுக்கு வரும் புறநோயாளிகளுக்கு கட்டாய காய்ச்சல் பரிசோதனை

Published On 2022-12-30 10:36 IST   |   Update On 2022-12-30 11:23:00 IST
  • அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
  • அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் புறநோயாளிகள் பிரிவில் காய்ச்சல் பரிசோதனை செய்ய வேண்டும்.

சென்னை:

கொரோனா அச்சுறுத்தல் மீண்டும் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து தமிழகத்தில் அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதுதொடர்பாக மருத்துவ கல்வி இயக்குனர், அனைத்து மருத்துவக் கல்லூரி முதல்வர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் புறநோயாளிகள் பிரிவில் காய்ச்சல் பரிசோதனை செய்ய வேண்டும். புறநோயாளிகளுக்கான தனியாக காய்ச்சல் பிரிவை ஏற்படுத்த வேண்டும்.

பொது மருத்துவத்துறை மற்றும் நுரையீரல் மருத்துவத்துறையுடன் இணைந்து இதனை செயல்படுத்துவது அவசியமாகும்.

நோயாளிகளை உடல் நிலை அடிப்படையில் தனித்தனியாக பிரித்து சிகிச்சை அளிக்க வேண்டும். பொது மருத்துவம் மற்றும் சுவாச நோய் துறை மருத்துவர்களின் கண்காணிப்பின் கீழ் உதவி பேராசிரியர்கள், முதுநிலை மருத்துவ மாணவர்கள் மூலமாக சிகிச்சை அளிக்க வேண்டும்.

தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு வழிகாட்டுதல்களின்படி சிகிச்சை மேற் கொண்டு அவர்களது உடல் நிலை தொடர்பான தகவல்களை அறிந்து வைத்திருக்க வேண்டும். இவர்களை டிஸ்சார்ஜ் செய்வது பற்றி பொது மருத்துவர்கள் சுவாச நோய் துறை மருத்துவர்களே முடிவெடுக்க வேண்டும்.

தேவைக்கேற்ப ஆக்சிஜனை இருப்பு வைத்திருப்பது அவசியமானது. அத்துடன் படுக்கைகளையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். பரிசோதனை கருவிகள் போதிய அளவில் இருப்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

டாக்டர்கள், நர்சுகள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் போதிய அளவுக்கு பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும். மருந்து-மாத்திரைகள், சிகிச்சைகளுக்கு தேவையான உரிய காரணங்கள் போன்றவை தட்டுபாடின்றி ஆஸ்பத்திரிகளில் இருக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News