மலேசியாவின் பினாங்கு-சென்னை இடையே நேரடி விமானம் இயக்க திட்டம்
- வணிக நிறுவனங்கள் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு 20 சதவீதம் வரை தள்ளுபடி கொடுக்கப்படுகிறது.
- விமான நிறுவனங்களுக்கு பினாங்கு மாநிலம் கட்டண சலுகை வழங்கும்.
ஆலந்தூர்:
மலேசியாவின் பினாங்கு நகரில் பொழுது போக்கு மற்றும் வணிக நிகழ்ச்சிக்காக சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்க மலேசியா திட்டமிட்டு உள்ளது.
இதையொட்டி இந்தியாவின் முக்கிய நகரங்களில் இருந்து பினாங்கு நகருக்கு நேரடி விமானங்களை இயக்க தயாராக இருக்கும் விமான நிறுவனங்களுடன் பினாங்கு சுற்றுலாத் துறை பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
சென்னை-பினாங்கு இடையே நேரடி விமான சேவைக்கு திட்டமிடப்பட்டு உள்ளது.
இதுகுறித்து பினாங்கு சுற்றுலாத் துறை மற்றும் படப்பாற்றல் பொருளாதாரத்திற்கான மாநில செயற்குழு உறுப்பினர் கூறும்போது, "தமிழகம் மற்றும் மலேசியா இடையே பாரம்பரிய உறவு உள்ளது. இதனால் குறிப்பாக சென்னையில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வர வாய்ப்பு உள்ளது" என்றார்.
பினாங்கை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறும் போது, "பினாங்கு நகர் வணிக நிகழ்ச்சிக்கான மையமாக திகழ்கிறது. வணிக நிறுவனங்கள் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு 20 சதவீதம் வரை தள்ளுபடி கொடுக்கப்படுகிறது.
சென்னை-பினாங்கு இடையே நேரடி விமான சேவை தொடங்குவதற்கு முயற்சி செய்து வருகிறோம். இந்தியாவின் முக்கிய நகரங்களில் இருந்து நேரடி விமானங்களை இயக்க தயாராக இருக்கும் விமான நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இதற்கு தயாராக இருக்கும் விமான நிறுவனங்களுக்கு பினாங்கு மாநிலம் கட்டண சலுகை வழங்கும்.
சென்னையில் இருந்து கோலாலம்பூர் வரும் பயணிகள் எண்ணிக்கை அதிகமாக உள்ளனர். அதனால் கோலாலம்பூர் வழியாக பினாங்கு மாநிலத்திற்கு வரும் பயணிகளுக்கு விமான சீட்டுகள் கிடைப்பதில்லை. இதனால் கோலாலம்பூரில் இருந்து பினாங்கிற்கு செல்லும் பயணிகள் ஒரு மணியில் இருந்து 2 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது என்றார்.