தமிழ்நாடு செய்திகள்

போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு திருநங்கைகள் ஆர்ப்பாட்டம்

Published On 2023-08-29 13:38 IST   |   Update On 2023-08-29 13:38:00 IST
  • மாயமான மாணவியை உடனடியாக கண்டுபிடிக்க வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
  • போலீஸ் தரப்பில் சரியான பதில் தரவில்லை என கூறப்படுகிறது.

அம்மாபேட்டை:

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள பூதப்பாடியில் 17 வயது மாணவி கடந்த சில நாட்களுக்கு முன்பு மாயமாகிவிட்டார்.

இது குறித்து அவரது உறவினர் திருநங்கை புவனேஸ்வரி என்பவர் அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் மாணவி மாயமானது குறித்து புகார் அளித்து அவரை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதன் பேரில் அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

ஆனால் புகார் அளித்து 8 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டதால் மாணவி குறித்து எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து திருநங்கை புவனேஸ்வரி ஒவ்வொரு நாளும் அம்மாபேட்டை போலீஸ் நிலையத்திற்கு சென்று மாணவி குறித்து தகவல் கேட்டுள்ளார். ஆனால் போலீஸ் தரப்பில் சரியான பதில் தரவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று காலை திருநங்கை புவனேஸ்வரி தலைமையில் 25-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் அம்மாபேட்டை போலீஸ் நிலையத்திற்கு எதிரே உள்ள சாலையில் திடீரென அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாயமான மாணவியை உடனடியாக கண்டுபிடிக்க வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

பின்னர் திடீரென அவர்கள் அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. இதையடுத்து அந்தியூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் திருநங்கைகளிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அப்போது அவர்கள் மாயமான மாணவியை மீட்டு தரும் வரை நாங்கள் இந்த இடத்தை விட்டு நகர மாட்டோம் என்று கூறி தொடர்ந்து கோஷம் எழுப்பி வருகின்றனர்.

இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News