தமிழ்நாடு

பொருளாதார நெருக்கடியால் தட்டுப்பாடு- இலங்கை விமானங்கள் மீண்டும் எரிபொருள் நிரப்ப சென்னை வருகிறது

Published On 2023-01-31 05:27 GMT   |   Update On 2023-01-31 07:05 GMT
  • இலங்கைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியா செய்து வருகிறது.
  • இலங்கையின் பெரிய ரக விமானங்கள் எரிபொருள் நிரப்பி தங்கள் நாட்டுக்கு கொண்டு செல்கின்றன.

ஆலந்தூர்:

இலங்கையில் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. கடந்த ஆண்டு பொது மக்களின் போராட்டத்தையடுத்து அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ரனில் விக்ரமசிங்கே புதிய அதிபராக பொறுப்பேற்றார். எனினும் இலங்கையில் பொருளாதார நெருக்கடி தொடர்ந்து நிலவிவருகிறது. இலங்கைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியா செய்து வருகிறது.

கடந்த ஆண்டு மே மாதம் முதல் ஜுன் இறுதிவரை இலங்கையில் விமானங்களுக்கான எரி பொருள் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. அப்போது சென்னையில் இலங்கை விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பப்பட்டது. பின்னர் நிலைமை ஓரளவு சீரானது.

இந்த நிலையில் இலங்கையில் மீண்டும் விமானங்களுக்கான எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகிறது. அங்கு எரிபொருள் கையிருப்பு இல்லை. இதனால் இலங்கையில் இருந்து மெல்பேர்ன், சிட்னி, டோக்கியோ போன்ற தொலைதூர நாடுகளுக்கு செல்ல விமானங்களுக்கு போதுமான எரிபொருள் இல்லாத நிலை நீடித்து வருகிறது.

இதைத்தொடர்ந்து இலங்கை விமானங்கள் மீண்டும் சென்னை, திருவனந்தபுரம், கொச்சின் ஆகிய விமான நிலையங்களுக்கு வரத் தொடங்கி உள்ளன.

சென்னை விமான நிலையத்தில் இலங்கை விமானத்தின் பெரிய ரக ஏ330 விமானத்தில் எரிபொருள் நிரப்பப்படுகிறது. ஆளில்லாத இந்த பெரிய ரக விமானத்தில் எரிபொருள் நிரப்பப்பட்டு மீண்டும் இலங்கைக்கு கொண்டு செல்லப்படுகிறது.

இந்த பெரிய ரக விமானத்தில் இருந்து மற்ற இலங்கை விமானங்களுக்கு அது பயன்படுத்தப்படுகிறது. இதற்காக கடந்த ஆண்டு இலங்கை விமான நிலையத்தில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு ஒப்பந்தம் செய்தது போல இந்த முறையும் செய்யப்பட்டு இருக்கிறது.

இதேபோல் இலங்கையின் அருகில் உள்ள திருவனந்தபுரம், கொச்சி ஆகிய விமான நிலையங்களில் இருந்தும் இலங்கையின் பெரிய ரக விமானங்கள் எரிபொருள் நிரப்பி தங்கள் நாட்டுக்கு கொண்டு செல்கின்றன.

இதுபோன்ற எரிபொருள் தட்டுப்பாட்டை இதுவரை பார்த்தது இல்லை என்று 1988-ம் ஆண்டு முதல் 8 விமான நிறுவனங்களில் பணிசெய்த பிரிட்டிஷ் விமான நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News