தமிழ்நாடு செய்திகள்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியையொட்டி பெருமாள்பதியில் பற்றி எரியும் காட்டுத்தீயை ஹெலிகாப்டர் மூலம் அணைக்கும் பணி நடப்பதை படத்தில் காணலாம்.

கோவை வனப்பகுதியில் 6-வது நாளாக எரிகிறது: ஹெலிகாப்டர் மூலம் காட்டுத்தீயை அணைக்கும் பணி தீவிரம்

Published On 2023-04-16 09:24 IST   |   Update On 2023-04-16 09:24:00 IST
  • தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு கால் எரிச்சல், கண் எரிச்சல் ஏற்பட்டது.
  • தீ வேகமாக வனத்தில் பரவி எரிந்ததால், தீயை ஹெலிகாப்டர் உதவியுடன் அணைக்க வனத்துறையினர் முடிவு செய்தனர்.

வடவள்ளி:

கோவை மாவட்டம் ஆலாந்துறை ஊராட்சிக்கு உள்பட்ட நாதேகவுண்டன்புதூர், மச்சினாம்பதி, பெருமாள்பதி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில், கடந்த 11-ந் தேதி காட்டுத்தீ ஏற்பட்டது.

பெருமாள்பதி மற்றும் மச்சினாம்பதி வனத்தையொட்டி வனப்பகுதிகளில் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. காட்டுத்தீ பற்றி எரிந்த தகவல் வந்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இருந்த போதிலும் வனம் முழுவதும் தீ பரவி விட்டதால் தீயை அணைப்பதில் வனத்துறையினருக்கு சிரமம் ஏற்பட்டது.

இதையடுத்து உடுமலை, பொள்ளாச்சி, ஆனைமலை புலிகள் காப்பகம், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் இருந்து 300-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் கோவைக்கு வரவழைக்கப்பட்டனர்.

அவர்களுடன் தீயணைப்பு துறையினரும் இணைந்து மேற்கு தொடச்சி மலையில் பற்றி எரிந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு கால் எரிச்சல், கண் எரிச்சல் ஏற்பட்டது. இருந்த போதிலும் அதற்கு முதலுதவி சிகிச்சை எடுத்து கொண்டு, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

தீ வேகமாக வனத்தில் பரவி எரிந்ததால், தீயை ஹெலிகாப்டர் உதவியுடன் அணைக்க வனத்துறையினர் முடிவு செய்தனர். இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடமும் தெரிவித்தனர்.

இதையடுத்து மாவட்ட நிர்வாகமும் வனத்தில் பரவிய காட்டுத்தீயை அணைக்க ஹெலிகாப்டர் பயன்படுத்த விமானப்படையிடம் அனுமதி கோரியது.

இதையடுத்து தீயை அணைப்பதற்கு ஹெலிகாப்டர் பயன்படுத்த விமானப்படை அனுமதி வழங்கியது. இதையடுத்து இன்று காலை சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து ஒரு ஹெலிகாப்டர் தீ பரவியுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிக்கு வந்தது.

பின்னர் மலைக்கு பின்புறம் உள்ள மலம்புழா அணையில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து, ஹெலிகாப்டர் மூலம் வனத்தில் பற்றி எரிந்த தீயை அணைக்கும் பணி நடந்தது.

காலை 8.30 மணி வரை இதுபோன்று 3 முறை ஹெலிகாப்டரில் தண்ணீர் எடுத்து வரப்பட்டு, காட்டு தீ அணைக்கும் பணி நடந்தது.

தற்போது வெயில் அதிகமாக இருப்பதால் தீ எரிவது சரியாக தெரியவில்லை எனவும், இதனால் மாலையில் ஹெலிகாப்டர் மூலம் தீயை அணைக்கும் பணி தொடரும் எனவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறும் போது, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தீயை கட்டுப்படுத்தும் முயற்சிகள் தொடர்கின்றன. இதுவரை 90 சதவீதம் தீ அணைக்கப்பட்டு விட்டது.

தற்போது இருட்டுப்பள்ளம், மதுக்கரை வனச்சரகம் உள்ளிட்ட பகுதிகளில் மட்டும் காட்டுத்தீயின் தாக்கம் அதிகம் உள்ளது.

இதுவரை சுமார் 15 ஹெக்டேர் செடிகள் எரிந்துள்ளன. தற்போது ஹெலிகாப்டர் உதவியுடன் தீயை அணைக்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது என தெரிவித்தனர்.

Tags:    

Similar News